வள்ளியூர் யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
178 வாக்காளர்களை பழவூர், ஆவரைகுளம் பஞ்சாயத்துடன் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வள்ளியூர் யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
வள்ளியூர்
எதிர்ப்பு
வள்ளியூர் யூனியன் சிதம்பரபுரம்-யாக்கோபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வார்டுகள் மக்கள்தொகை அடிப்படையில் மறுவரை செய்யப்பட்டது. அப்போது சிதம்பரபுரம்-யாக்கோபுரம் பஞ்சாயத்து 1, 2, மற்றும் 3-வது வார்டுகளில் உள்ள 178 வாக்காளர்களை பழவூர் மற்றும் ஆவரைகுளம் பஞ்சாயத்துடன் இணைத்துள்ளனர்.
இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஆகவே சிதம்பரபுரம்-யாக்கோபுரம் பஞ்சாயத்து 1, 2, 3-வது வார்டுகளில் இருந்து மாற்றப்பட்ட 178 வாக்காளர்களையும் மீண்டும் சிதம்பரபுரம்-யாக்கோபுரம் பஞ்சாயத்துடன் இணைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயகுமார், கோட்டத்தலைவர் தங்கமனோகர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் வள்ளியூர் யூனியன் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட வந்தனர்.
போராட்டம்
அவர்களை யூனியன் அலுவலகத்திற்குள் விடாமல் தடுக்கும் பொருட்டு தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அவர்கள் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். வள்ளியூர் போலீஸ் உதவி சூப்பிரண்டு சமய்சிங் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்படி ராதாபுரம் தாசில்தார் தலைமையில் தாலுகா அலுவலகத்தில் வைத்து சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர்.
அதன்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கு இருந்து கலைந்து ராதாபுரம் சென்றனர். இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
Related Tags :
Next Story