கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்


கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Sept 2021 12:49 AM IST (Updated: 15 Sept 2021 12:49 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில், கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

நெல்லை:

கிராம சுகாதார செவிலியர்கள்

தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் மாநில துணைத்தலைவி ரமா தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், கொரோனா தடுப்பூசி மருந்தை எடுத்து செல்வதற்கும், திரும்பி வருவதற்கும் தினமும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்வதால் எங்களுக்கு அலைச்சல், பணவிரயம் அதிகம் ஆகிறது. எனவே கொரோனா தடுப்பூசி போடும் இடங்களுக்கு வாகனம் மூலம் அழைத்து செல்ல வேண்டும். திருப்பி கொண்டு வந்து விட வேண்டும். கிராம சுகாதார பகுதி சுகாதார சமுதாய நல செவிலியர்கள் அனைவரும் பெண்கள் என்பதால் கொரோனா தடுப்பூசி காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் போட அனுமதிக்க வேண்டும். வாரம் ஒரு நாள் மற்றும் பண்டிகை தினங்களில் அரசு விடுப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஆர்ப்பாட்டம்

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், நெல்லை அருகே ராமையன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேப்பங்குளத்தில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து விட்டனர். அந்த ஆக்கிரமிப்பை உடனே அகற்ற வேண்டும். சுடுகாட்டு கொட்டகை அமைத்து தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை நகரில் வசிக்கும், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து இங்கு வந்து தங்கி விநாயகர், கிருஷ்ணர் உள்ளிட்ட சிலைகளை செய்து வருகிறவர்கள் சித்தாப்பாய் தலைமையில் கலெக்டர் அலுவலகம் வந்து மனு கொடுத்தனர்.

அதில், நாங்கள் 20 ஆண்டுகளாக இங்கு இருந்து மண்ணால் விநாயகர், கிருஷ்ணர், அம்மன் சிலைகள் செய்து வருகிறோம். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக இந்து கோவில்களில் விழா நடத்த தடை விதித்ததால் எங்களுடைய தொழில் பாதித்து விட்டது. எனவே எங்களுக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Next Story