நெல்லை அருகே கொலை செய்யப்பட்ட தொழிலாளியின் தலை கல்லறையில் மீட்பு
நெல்லை அருகே, கொலை செய்யப்பட்ட தொழிலாளியின் தலை கல்லறையில் மீட்கப்பட்டது. எனவே, அவர் பழிக்குப்பழியாக தீர்த்து கட்டப்பட்டாரா? என்பது பற்றி தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:
தொழிலாளி கொலை
நெல்லை அருகே உள்ள கீழச்செவல் நயினார்குளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சங்கர சுப்பிரமணியன் (வயது 38). இவர் அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு சங்கர சுப்பிரமணியன் தனது மோட்டார் சைக்கிளில் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட வடுவூர்பட்டி செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் அவரை வழிமறித்து மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளிவிட்டு அரிவாளால் தலையை துண்டித்து படுகொலை செய்தனர். பின்னர் உடலை அங்கேயே போட்டுவிட்டு தலையை மட்டும் எடுத்துச்சென்று விட்டனர்.
தலை மீட்பு
இதுகுறித்து தகவலறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சங்கர சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலையை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கோபாலசமுத்திரம் பகுதியிலுள்ள மந்திரம் என்பவரது கல்லறையில் தலை கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மந்திரம் கடந்த 2014 -ம் ஆண்டு கொலை செய்யப்பட்டவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பழிக்குப்பழியா?
எனவே, சங்கர சுப்பிரமணியன் பழிக்குப்பழியாக தீர்த்து கட்டப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். சங்கர சுப்பிரமணியன் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதும், தலை கல்லறையில் மீட்கப்பட்டதும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொலையில் துப்புதுலக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story