அரண்மனையை ரூ.2 கோடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி தொடக்கம்
பாளையம்பட்டி அரண்மனை ரூ.2 கோடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி தொடங்கி உள்ளது.
அருப்புக்கோட்டை,
பாளையம்பட்டி அரண்மனை ரூ.2 கோடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி தொடங்கி உள்ளது.
அரண்மனை
தற்போது முதல் நிலை ஊராட்சியாக உள்ள பாளையம்பட்டி முன்காலத்தில் பாளையத்திற்கே தலைமையிடமாக விளங்கியதால் இந்த ஊர் பாளையம்பட்டி என பெயர் பெற்றது.
வரலாற்று சிறப்பு மிக்க பாளையம்பட்டி அரண்மனை கோட்டை தேவர் மகன் ராமச்சந்திர தேவரால் கட்டப்பட்டது. இந்த அரண்மனை அனைத்து விளையாட்டு மைதான வசதிகளுடன் கட்டப்பட்டது. இங்குள்ள வசந்த மண்டபம் கலையம்சங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த அரண்மனையில் வேல்ஸ் இளவரசர் வந்து தங்கியதாக கூறப்படுகிறது.
புதுப்பிக்கும் பணி
வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த அரண்மனையில் தற்போது அரசு ஆசிரியர் பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது.
70 ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பும் இன்றி கல்லூரி செயல்படும் குறிப்பிட்ட பகுதி தவிர அனைத்து பகுதிகளிலும் சேதமடைந்து பாழடைந்த நிலையில் காணப்படுகிறது. அருப்புக்கோட்டையின் அடையாளமான பாளையம்பட்டி அரண்மனையை பாதுகாக்க பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில் ரூ.2 கோடியில் பழமை மாறாமல் அரண்மனையை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கியது. சிமெண்டு பயன்படுத்தாமல் சுண்ணாம்பு, மணல், கருப்பட்டி, கடுக்காய் பயன்படுத்தி அரண்மனை புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
மகிழ்ச்சி
மணலுடன் சுண்ணாம்பு பால், கடுக்காயை உடைத்து ஊறவைத்த நீர் சேர்த்து நவீன எந்திரம் மூலம் கலவையாக்கி இறுதியாக கருப்பட்டி பால் சேர்த்து அரண்மனை முழுவதும் பூசப்படுகிறது.
மேலும் அரண்மனை புதுப்பிப்பிற்காக நூற்றாண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட சிறிய அளவிலான செங்கற்களே தற்போதும் பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பழமை மாறாமல் அரண்மனையை புதுப்பிக்கும் பணிகள் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் இந்த பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story