நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற 2 பேர் மீது வழக்கு


நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 15 Sept 2021 2:19 AM IST (Updated: 15 Sept 2021 2:19 AM IST)
t-max-icont-min-icon

மதுரை அண்ணாநகர் பகுதியில் 3 நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மதுரை, 
மதுரை அண்ணாநகர் பகுதியில் 3 நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
நாய் குட்டிகள் 
மதுரை மாநகரில் சமீப காலமாக நாய், குதிரை மற்றும் பசுக்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது. தெரு நாய்களுக்கு உணவில் விஷம் கொடுப்பது, பசுக்கள் மீது ஆசிட் வீசுவது போன்ற சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
இந்த நிலையில் மதுரை அண்ணாநகர் கோமதிபுரம் பகுதியில் சுற்றித்திரிந்த 3 நாய் குட்டிகள் இறந்த நிலையிலும், 2 நாய்கள் உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக விலங்கு நல ஆர்வலர் மயூர் (வயது 36) என்பவருக்கு தகவல் கிடைத்தது.
உடனே அவர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நாய்குட்டிகளை மீட்டு கால்நடை மருத்துவமனையில் சேர்த்தார். அங்கிருந்த டாக்டர்கள் நாய்க்கு உடனே குளூக்கோஸ் உள்ளிட்ட முதலுதவி சிகிச்சை அளித்து நாய் குட்டிகளை காப்பாற்றினர். இது குறித்து டாக்டர்கள் கூறும் போது நாய் விஷம் உள்ள உணவை சாப்பிட்டதாக தெரிவித்தனர். பின்னர் மயூர் அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.
விஷம் 
அதில் அந்த பகுதியில் தெரு நாய்கள் குட்டி போட்டு உள்ளது. இது அந்த பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கு தொல்லையாக இருந்துள்ளது. எனவே 2 பேர் சைக்கிளில் வந்து அங்கிருந்த சுமார் 10 நாய்களுக்கு விஷம் வைத்த உணவை கொடுத்தது தெரியவந்தது. அதில் குட்டி நாய்கள் அந்த உணவை சாப்பிட்ட நிலையில் பெரிய நாய்கள் அங்கிருந்து தப்பி விட்டன என்பது தெரியவந்தது.
அதை தொடர்ந்து போலீசார் நாய்க்கு விஷம் கலந்த உணவை கொடுத்த 2 பேரை தேடி வருகிறார்கள். மேலும் மதுரை மாவட்டத்தில் கடந்த 9 மாதங்களில் 30-க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்ட நிலையில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் தெரிவித்தார்.
2 நாய்களை காப்பாற்றினோம்
இது குறித்து மதுரை மண்டல கால்நடைத்துறை இணை இயக்குனர் நடராஜ்குமார் கூறும் போது, உயிரிழந்த 3 நாய்களுக்கும் உடற்கூராய்வு செய்து அந்த நாய் உண்ட உணவு மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம். நாய் ஆய்வில் செய்ததில் நாய் விஷம் உள்ள உணவை சாப்பிட்டு உள்ளது தெரியவந்தது. மேலும் தீவிர சிகிச்சையின் பயனாக மற்ற 2 நாய்களை காப்பாற்றி உள்ளோம். மதுரையில் கால்நடைகள் மீதான தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Next Story