உடல் நலக்குறைவால் உயிரிழந்த ஆஸ்கர் பெர்னாண்டஸ் உடல் பெங்களூருவில் நாளை அடக்கம்
உடல் நலக்குறைவால உயிரிழந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ஆஸ்கர் பெர்னாண்டசின் உடல் பெங்களூருவுக்கு கொண்டு வரப்பட்டு நாளை (வியாழக்கிழமை) அடக்கம் செய்யப்படுகிறது. அவரது உடலுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இன்று நேரில் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
மங்களூரு:
ஆஸ்கர் பெர்னாண்டஸ் மரணம்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆஸ்கர் பெர்னாண்டஸ் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். உடல்நலக்குறைவால் 55 நாட்களாக தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சுயநினைவு திரும்பாமல் ஆஸ்பத்திரியிலேயே அவரது உயிர் பிரிந்தது. ஆஸ்கர் பெர்னாண்டசின் சொந்த ஊர் உடுப்பி மாவட்டம் ஆகும்.
அவர் உயிரிழந்ததை அடுத்து அவரது உடல் உடுப்பியில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அவருடைய குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் மங்களூருவில் உள்ள பாதர் முல்லர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிணவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
பொதுமக்கள் அஞ்சலி
நேற்று காலையில் அவரது உடல் பாதர் முல்லர் தனியார் மருத்துவமனையில் இருந்து உடுப்பியில் உள்ள புனித அன்னை பேராலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் உடுப்பி காங்கிரஸ் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடுப்பி மாவட்ட காங்கிரசார் மற்றும் பொதுமக்கள் ஆஸ்கர் பெர்னாண்டசின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதையடுத்து அவரது உடல் மங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு தட்சிண கன்னடா மாவட்ட காங்கிரசார் மற்றும் பொதுமக்கள் ஆஸ்கர் பெர்னாண்டசின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் இரவு மீண்டும் அவரது உடல் பாதர் முல்லர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பெங்களூருவில் உடல் அடக்கம்
இன்று(புதன்கிழமை) காலையில் ஆஸ்கர் பெர்னாண்டசின் உடல் மங்களூருவில் உள்ள மிலக்ரெஸ் பேராலயத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர் விமானம் மூலம் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டு தனியார் மருத்துவமனையில் உள்ள பிணவறையில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. நாளை காலை அவரது உடல் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
அதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்துகிறார்கள். அதையடுத்து அவரது உடல் பெங்களூரு - ஓசூர் சாலையில் உள்ள செயின்ட் பேட்ரிக் பேராலய கல்லறை தோட்டத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளதாக கர்நாடக மாநில காங்கிரஸ் செயல் தலைவர் சலீம் அகமது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
சோனியா, ராகுல் காந்தி...
முன்னதாக உடுப்பியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆஸ்கர் பெர்னாண்டசின் உடலுக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மந்திரியுமான டி.கே.சிவக்குமார் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூருவுக்கு செல்வதற்காக மங்களூரு பஜ்பேவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மூத்த காங்கிரஸ் தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டசின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு பெரிய இழப்பு. அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. பெங்களூருவில் நடக்கும் ஆஸ்கர் பெர்னாண்டசின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட கட்சியின் தேசிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story