பத்மநாபபுரம் அரண்மனை திறப்பு


பத்மநாபபுரம் அரண்மனை திறப்பு
x
தினத்தந்தி 14 Sep 2021 8:52 PM GMT (Updated: 14 Sep 2021 8:52 PM GMT)

5 மாதங்களுக்கு பிறகு பத்மநாபபுரம் அரண்மனை திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வந்து பார்த்து மகிழ்ந்தனர்.

பத்மநாபபுரம், 
5 மாதங்களுக்கு பிறகு பத்மநாபபுரம் அரண்மனை திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வந்து பார்த்து மகிழ்ந்தனர்.
பத்மநாபபுரம் அரண்மனை
தக்கலை அருகே பத்மநாபபுரம் அரண்மனை உள்ளது. கேரள அரசின் கட்டுப்பாட்டின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் இந்த அரண்மனை கேரள கலைநயத்துடன்  மரக்கட்டைகளை கொண்டு கட்டப்பட்டுள்ளது. 
18-ம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் சமஸ்தான மன்னரான அனுஷம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவால் கட்டப்பட்ட அரண்மனையின் உள்ளே மர வேலைபாடுகளுடன் பல அரிய சிற்பங்கள், ஓவியங்கள் மற்றும் வியக்கத்தக்க பல்வேறு கலை நுட்பங்கள் சார்ந்த பொருட்கள் உள்ளன. இவற்றை காண தினமும் உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.
சுற்றுலா பயணிகள் வருகை
கொரோனா 2-வது அலை தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதி பத்மநாபபுரம் அரண்மனை மூடப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து 146 நாட்களுக்கு பிறகு, அதாவது சுமார் 5 மாதங்களுக்கு பிறகு பத்மநாபபுரம் அரண்மனை நேற்று திறக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து அரண்மனையை காண சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். அரண்மனையின் உள்ளே குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே சுற்றுலாபயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். முன்னதாக சுற்றுலா பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதனை தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் செய்யப்படுகிறது. அப்போது காய்ச்சல் இல்லை என்று தெரிய வரும் சுற்றுலா பயணிகள் மட்டுமே அரண்மனை நுழைவாயில் வழியாக அனுமதிக்கப்படுகின்றனர். முககவசம் கட்டாயம் அணிந்திருந்த வேண்டும். 
முதல் நாளான நேற்று சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வந்து அரண்மனையை பார்த்து ரசித்தனர்.

Next Story