மங்களூருவில் ஒருவருக்கு நிபா வைரஸ் அறிகுறி
மங்களூருவில் ஒருவருக்கு நிபா வைரஸ் அறிகுறி ஏற்பட்டுள்ளது. மேலும் குடகில் 19 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உறுதியாகி உள்ளது.
பெங்களூரு:
நிபா வைரஸ் அறிகுறி
கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் கேரளா - கர்நாடகா எல்லையில் உள்ள தட்சிண கன்னடா மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் இருந்து மங்களூருவுக்கு வந்த ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அந்த நபரின் ரத்த மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. இதை தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் ராஜேந்திராவும் உறுதி செய்துள்ளார். இதுபற்றி கலெக்டர் ராஜேந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:-
நிபா வைரஸ் பாதிப்பின் அறிகுறி ஒருவருக்கு தென்பட்டுள்ளது. அவர் கேரளாவில் இருந்து மங்களூருவுக்கு வந்துள்ளார். அவரது சொந்த ஊர் கார்வார் ஆகும். மேலும் அவர் கோவாவில் உள்ள ஆர்.டி.பி.சி.ஆர். மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அவரது ரத்த மாதிரி புனேவில் உள்ள தேசிய கிருமி ஆய்வக பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கீறது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டுபிடித்து பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளோம். மேலும் நிபா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உடுப்பி, உத்தர கன்னடா மாவட்ட நிர்வாகங்களையும் அறிவுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
19 பேருக்கு டெல்டா பிளஸ்...
இதற்கிடையே குடகு மாவட்டத்தில் திடீரென கடந்த 2 நாட்களுக்கு முன்பு 67 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. இருப்பினும் அவர்களது உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தது. இதனால் அவர்களது சளி மற்றும் ரத்த மாதிரி ஆகியவை பரிசோதனைக்காக பெங்களூருவில் உள்ள நிமான்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கு நடந்த ஆய்வில் அவர்களில் 19 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர்கள் 19 பேரையும் டாக்டர்கள் தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதன்காரணமாக கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை பரவ தொடங்கி விட்டதாக மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story