இந்தி தின விழாவை கண்டித்து கன்னட அமைப்பினர் போராட்டம்


இந்தி தின விழாவை கண்டித்து கன்னட அமைப்பினர் போராட்டம்
x
தினத்தந்தி 15 Sept 2021 2:30 AM IST (Updated: 15 Sept 2021 2:30 AM IST)
t-max-icont-min-icon

இந்தி தின விழாவை கண்டித்து கன்னட அமைப்பினர் பெங்களூருவில் போராட்டம் நடத்தினர்.

பெங்களூரு:

கோஷங்களை எழுப்பினர்

  இந்தி தின விழா நேற்று நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களில் நடைபெற்றது. இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கர்நாடக ரக்‌ஷண வேதிகே அமைப்பு டுவிட்டர் பக்கத்தில், இந்தி திணிப்பை நிறுத்துங்கள் என்ற பெயரில் ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்கி தீவிரமாக பரப்பினர். இந்த பிரசார இயக்கம் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெற்றது.

  மேலும் அந்த அமைப்பின் தொண்டர்கள் பெங்களூருவில் உள்ள மத்திய அரசின் வங்கிகள் முன்பு குவிந்து போராட்டம் நடத்தினர். மத்திய அரசின் இந்தி தின விழாவை கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர். பெங்களூரு மட்டுமின்றி கலபுரகி, விஜயாப்புரா, சிக்பள்ளாப்பூர், தீர்த்தஹள்ளி, உடுப்பி, கோலார், மண்டியா, தார்வார் உள்ளிட்ட இடங்களிலும் அந்த அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மேலும் அவர்கள் வங்கி மேலாளர்களை நேரில் சந்தித்து ஒரு கடிதத்தை வழங்கி, இந்தி மொழியை திணிப்பதை நிறுத்திவிட்டு, வங்கி சேவைகளை கன்னடத்தில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மக்களிடையே விழிப்புணர்வு

  கன்னட ரக்‌ஷண வேதிகே அமைப்பின் மாநில செயலாளர் அருண் ஜவகல் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தி திணிப்பை கைவிட்டு கன்னடத்தை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து மக்களிடயே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாங்கள் வங்கிகள் முன்பு போராட்டம் நடத்தினோம். இந்தி திணிப்பால் கர்நாடகத்தில் வங்கியில் ஆயிரக்கணக்கான வேலைகள் பறிபோய்விட்டன. பல்வேறு மொழிகளை பேசும் நாட்டில் மக்களின் வரிப்பணத்தை இந்தி மொழி மேம்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்துவதை ஏற்க முடியாது. அதனால் தான் நாங்கள் இந்தி திவஸ் விழாவிற்கு தீவிரமாக எதிர்ப்பு தெரிவிக்கிறோம்" என்றார்.

  அந்த அமைப்பின் மாநில தலைவர் நாராயணகவுடா கூறுகையில், "இந்த தின விழாவை நடத்துவது ஜனநாயக விரோதமானது. அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கத்திற்கு எதிரானது. அனைவரும் சமம் என்று அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. இந்தி மொழி பேசாத மக்கள் மற்றும் சமத்துவத்தில் நம்பிக்கை கொண்ட இந்தி பேசுபவர்கள் மத்திய அரசின் முடிவை எதிர்க்க வேண்டும்" என்றார்.

அமைதியை கெடுக்கக்கூடாது

  முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டரில், "கர்நாடகத்தில் கன்னடம் தான் முதன்மையானது. இந்தி தின விழா தேவையற்றது. இந்தியை திணித்து பல மொழிகள் பேசும் நாட்டில் அமைதியை கெடுக்கக்கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

  கன்னட ரக்‌ஷண வேதிகே அமைப்பு மட்டுமின்றி கன்னட சலுவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் உள்பட பல்வேறு கன்னட அமைப்பினர் இந்தி தின விழாவுக்கு எதிராக பெங்களூருவில் போராட்டம் நடத்தினர்.

Next Story