சுப்பிரமணியசாமி கோவிலுக்குரிய ரூ.40 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்பு


சுப்பிரமணியசாமி கோவிலுக்குரிய ரூ.40 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்பு
x
தினத்தந்தி 15 Sept 2021 2:44 AM IST (Updated: 15 Sept 2021 2:44 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை பூக்காரத்தெருவில் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.40 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு, கற்கள் ஊன்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டது.

தஞ்சாவூர்;
தஞ்சை பூக்காரத்தெருவில் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.40 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு, கற்கள் ஊன்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டது.
கோவிலுக்கு சொந்தமான நிலம்
தஞ்சை பூக்காரத்தெருவில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. மேலும் தனிநபர்கள் சிலர், கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டியுள்ளனர்.
இந்த நிலத்திற்கு வாடகை எதுவும் கொடுக்கப்படவில்லை. ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தை மீட்கும் வகையில் ஆக்கிரமிப்பு செய்தவர்களை காலி செய்யும்படி இந்து சமய அறநிலையத்துறையினர் நோட்டீசு அனுப்பினர். ஆனால் அவர்கள் நிலத்தை காலி செய்யவில்லை.
மீட்பு
இதனால் இந்து சமயஅறநிலையத்துறை இணை ஆணையர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்தநிலையில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவராமகுமார் மேற்பார்வையில் செயல் அலுவலர்கள் சிவசங்கரி, ஹரீஷ்குமார், ராஜேஸ், மணிகண்டன், பிருந்தாதேவி, ஆய்வாளர்கள் உமாமகேஸ்வரி, பிரகாஷ், கீதாபாய், கணக்கர் ஆனந்தராஜ் மற்றும் பணியாளர்கள் நேற்றுகாலை பூக்காரத்தெரு சுப்பிரமணியசாமி கோவிலுக்கு அருகே உள்ள மார்க்கெட் பகுதிக்கு சென்றனர்.
அங்கு தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்த 1,680 சதுரஅடி நிலத்தை மீட்டதுடன் பொக்லின் எந்திரம் மூலம் இந்த நிலத்தில் கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது. பின்னர் இந்த நிலத்தை சுற்றிலும் கற்கள் ஊன்றப்பட்டு இரும்பு கம்பியால் வேலி அமைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.40 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறும்போது, கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் 120 கடைகளுடன் கூடிய வணிக வளாகம் கட்ட முடிவு செய்து இருக்கிறோம். ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் திட்டத்தின் மூலமாகவே வணிக வளாகம் கட்டப்படும். கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி இருப்பவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். இந்த வழக்கில் எங்களுக்கே தீர்ப்பு சாதகமாக வரும். அதன்பிறகு அந்த வீடுகளும் அப்புறப்படுத்தப்படும் என்றனர்.

Next Story