ஆஸ்கர் பெர்னாண்டஸ், நடிகர் சஞ்சாரி விஜய் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல்
ஆஸ்கர் பெர்னாண்டஸ், நடிகர் சஞ்சாரி விஜய் ஆகியோருக்கு கர்நாடக சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
பெங்களூரு:
இரங்கல் தீர்மானம்
கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. நேற்று கூட்டத்தொடரின் 2-வது நாள் கூட்டம் காலை 11 மணிக்கு விதான சவுதாவில் தொடங்கியது.
கூட்டம் தொடங்கியதும், நேற்று முன்தினம் மரணம் அடைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் மற்றும் விபத்தில் மரணம் அடைந்த தேசிய விருது பெற்ற நடிகர் சஞ்சாரி விஜய் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
நட்பு பாராட்டியவர்
காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் நேற்று (நேற்று முன்தினம்) மரணம் அடைந்துள்ளார். அவர் அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர். மத்திய அரசின் திட்டங்களை கர்நாடகத்தில் செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டினார்.
நடிகர் சஞ்சாரி விஜய் விபத்தில் மரணம் அடைந்தார். நான் அவனல்ல அவளு என்ற படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. ஆனால் அவர் சிறு வயதிலேயே மரணம் அடைந்துவிட்டார். அவர் சஞ்சாரி என்ற நாடக நிறுவனங்களின் நாடகங்களில் நடித்தார். அதனால் அவரது பெயருடன் சஞ்சாரி என்று சேர்ந்து கொண்டது. ஆஸ்கர் பெர்னாண்டஸ் மற்றும் சஞ்சாரி விஜய் ஆகியோரின் ஆத்மா அமைதி பெற இறைவனிடம் வேண்டுகிறேன்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
சித்தராமையா
அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, ‘‘ ஆஸ்கர் பெர்னாண்டஸ் உடுப்பி நகரசபை கவுன்சிலராக இருந்து தேசிய அரசியலில் உயர்ந்த இடத்தை பிடித்தார். அவர் கடுமையான உழைப்பாளி. காங்கிரசின் விசுவாசமிக்க தலைவர். விசுவாசத்திற்கு மறுபெயர் ஆஸ்கர் பெர்னாண்டஸ்.
நேரு குடும்பத்திற்கு மிக நெருக்கமாக இருந்தார். அதே போல் நடிகர் சஞ்சரி விஜய் விபத்தில் இறந்தார். தேசிய விருது பெற்றவரான அவர் இளம் வயதிலேயே இறந்துவிட்டார். அவர் கொரோனா காலத்தில் ஏழை மக்களுக்கு உதவினார். இருவரின் ஆத்மா அமைதி பெற பிராா்த்தனை செய்கிறேன்’’ என்றார்.
மவுன அஞ்சலி
அதைத்தொடர்ந்து ஜனதா தளம் (எஸ்) துணைத்தலைவர் பண்டப்பா காசம்பூர், சட்டசபை விவகாரத்துறை மந்திரி மாதுசாமி, காங்கிரஸ் உறுப்பினர் எச்.கே.பட்டீல் ஆகியோர் பேசினர். அதன் பிறகு இரங்கல் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர் உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
Related Tags :
Next Story