வேன் நிறுத்துவதில் இருதரப்பினர் இடையே மோதல்; 8 பேர் கைது


வேன் நிறுத்துவதில் இருதரப்பினர் இடையே மோதல்; 8 பேர் கைது
x
தினத்தந்தி 15 Sep 2021 12:05 AM GMT (Updated: 15 Sep 2021 12:05 AM GMT)

வேன் நிறுத்துவதில் இருதரப்பினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக இருதரப்பினரையும் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆவடி,

ஆவடியை அடுத்த பட்டாபிராம் தேவராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பாப ு(வயது 33). இவர், சொந்தமாக வேன் வைத்து, அதனை தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் ஓட்டி வருகிறார். அதே பகுதியில் லட்சுமி என்பவரது வீட்டின் அருகே தனது வேனை நிறுத்துவது வழக்கம்.

இந்தநிலையில் லட்சுமி, வீட்டின் அருகில் உள்ள மரம் செடி கொடிகளை வெட்டி அந்த இடத்தில் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று முன்தினம் இரவு பாபு தனது வேனை நிறுத்த முடியாததால், லட்சுமியிடம் தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர்.

நேற்று காலை பாபுவின் அண்ணன் பிரபாகரன ்(37) என்பவருக்கும், லட்சுமியின் அண்ணன் முனீஸ்வரன் (50) என்பவருக்கும் இடையே இதுதொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது முனீஸ்வரனுக்கு ஆதரவாக சிலரும், பிரபாகரனுக்கு ஆதரவாக சிலரும் வந்தனர்.

வாக்குவாதம் முற்றி கோஷ்டி மோதலாக மாறியது. இரு தரப்பினரும் உருட்டுக்கட்டை, கைகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது முனீஸ்வரன் சிறிய கத்தரிக்கோலால் பிரபாகரனின் முதுகில் குத்தினார். இதில் படுகாயமடைந்த பிரபாகரனுக்கு ஆவடி அரசு ஆஸ்பத்திரியில் 2 தையல் போடப்பட்டது.

இதுகுறித்து இருதரப்பினரும் பட்டாபிராம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் முனீஸ்வரன், துரைராஜ் (45), பிரபு (37), பாபு (22) ஆகிய 4 பேரையும், முனீஸ்வரன் கொடுத்த புகாரின்பேரில் பிரபாகரன், அவரது தம்பி பாபு, விஜயன் (52), ரவி (43) ஆகிய 4 பேரையும் என இருதரப்பினரையும் சேர்ந்த 8 பேரை கைது செய்தனர்.

Next Story