நீர்வழி போக்குவரத்துக்கு அருமையான பக்கிங்காம் கால்வாயை ஏன் சீர்படுத்தவில்லை? ஐகோர்ட்டு கேள்வி


நீர்வழி போக்குவரத்துக்கு அருமையான பக்கிங்காம் கால்வாயை ஏன் சீர்படுத்தவில்லை? ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 15 Sep 2021 12:08 AM GMT (Updated: 15 Sep 2021 12:08 AM GMT)

நீர்வழி போக்குவரத்துக்கு அருமையான பக்கிங்காம் கால்வாயை ஏன் சீர்படுத்தவில்லை என்று சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை,

சென்னையை அடுத்துள்ள மாதவரத்தில் உள்ள 1.17 எக்டேர் பரப்பிலான ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, அதைப் பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் ஆக்கிரமிப்பு குறித்து மாநகராட்சி கமிஷனருக்கு மனுதாரர் புதிதாக மனு அளிக்கவேண்டும். அந்த மனுவின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை முடித்துவைக்கிறோம் என்று உத்தரவிட்டனர்.

இதன்பின்னர், ‘சென்னையில் மொத்தம் எத்தனை நீர்நிலைகள் உள்ளன?’ என்று மாநகராட்சி தரப்பு வக்கீலிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு மாநகராட்சி வக்கீல், ‘நீர்நிலைகளை அடையாளம் காண திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் நீர்நிலைகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘பக்கிங்காம் கால்வாய் ஒரு அருமையான கால்வாய் ஆகும். நீர்வழி போக்குவரத்துக்கான அந்தக் கால்வாயை ஏன் இதுவரை சீர்படுத்தவில்லை? அக்கால்வாயை முறையாக சீர்படுத்தவில்லை என்றால், வரலாற்றுப் புத்தகத்தில் மட்டுமே அதைப் பற்றிய பதிவுகள் இருக்கும். நீர்நிலைகளைப் பாதுகாப்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும்’ என்று கருத்து தெரிவித்தனர்.

Next Story