திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் கசவநல்லாத்தூர், கணேஷ் நகரை சேர்ந்தவர் நாராயணன் (வயது 61). இவர் கடம்பத்தூரில் மின்சார துறையில் பணி செய்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் கடந்த 10-ந்தேதியன்று நாராயணன் தனது மனைவி மற்றும் மருமகளுடன் சென்னையில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றார். நேற்று மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டுக்குள் சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த கம்மல், மூக்குத்தி, வளையல், தங்கச்சங்கிலி என 11 பவுன் தங்க நகையும், பூஜை அறையில் இருந்த ஒரு கிலோ வெள்ளி பொருட்களும் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து நாராயணன் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
Related Tags :
Next Story