மாமல்லபுரத்தில் அலை சறுக்கு போட்டி - 100 வீரர்கள் பங்கேற்று சாகசம்


மாமல்லபுரத்தில் அலை சறுக்கு போட்டி - 100 வீரர்கள் பங்கேற்று சாகசம்
x
தினத்தந்தி 15 Sep 2021 12:37 AM GMT (Updated: 15 Sep 2021 12:37 AM GMT)

மாமல்லபுரத்தில் அலை சறுக்கு போட்டி நடந்தது. இதில் 100 வீரர்கள் பங்கேற்று சாகசம் நிகழ்த்தினர்.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்ட அளவிலான ஒரு நாள் அலை சறுக்கு போட்டி மகாப்ஸ் அலை சறுக்கு போட்டி என்ற பெயரில் மாமல்லபுரத்தில் நடந்தது. மாமல்லபுரம் மற்றும் கோவளம் என பகுதிகளை சேர்ந்த அலை சறுக்கு வீரர்கள் 100 பேர் இந்த போட்டியில் பங்கேற்றனர். நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய அலை சறுக்கு போட்டி மாலை 5 மணி வரை நடந்தது. 4 அடி நீளம் முதல் 10 அடி நீளம் வரை உள்ள அலை சறுக்கு பலகையில் கடலில் சீறிவரும் அலைகளை வீரர்கள் கணித்து அலை சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டனர். மாமல்லபுரம் மற்றும் கோவளம் என அணிகளில் எந்த வீரர்கள் அதிக நேரம் கடலில் சீறி வரும் அலைகளில் தாக்கு பிடித்து அலை சறுக்கி விளையாடுகிறார்களோ அந்த அணிக்கு பரிசு கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

இதனால் மாமல்லபுரம் கடற்கரையில் 18 முதல் 35 வயது வரை உள்ள அலை சறுக்கு வீரர்கள் கடுமையான பயிற்சி எடுத்து அலை சறுக்கு பலகையுடன் வந்திருந்ததை காண முடிந்தது. 10 அடி உயரத்திற்கு சீறி வரும் அலைகளில் வீரர்கள் பலர் பலகையின் மீது நின்று அலை சறுக்கி சாகசம் நிகழ்த்தினர். அப்போது பலர் சீறி வரும் அலைகளை கணித்து 100 முதல் 200 மீட்டர் தூரம் வரை கடலில் அலையில் சிக்கி கீழே விழாமல் அலைசறுக்கி அசத்தினார்கள்.

சிலர் சீறிவரும் அலையின் வேகத்தில் சறுக்கி விளையாட முடியாமல் ராட்சத அலைகளில் மூழ்கி தவித்ததை காண முடிந்தது. நேற்று நடைபெற்ற அலைசறுக்கு போட்டிகளை காண பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கடற்கரைக்கு வந்திருந்ததை காண முடிந்தது. அலை சறுக்கு போட்டிகளை ஒருங்கிணைப்பாளர் சபரிநாத்நாயர், பயிற்சியாளர்கள் லிங்கேஸ்வரன், முகேஷ்பஞ்சநாதன், தரணி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Next Story