தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்குதல்
தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்குதல்
கோத்தகிரி
கோத்த்கிரி பகுதியில் மாறுபட்ட சீதோஷ்ண நிலையால் தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்குதல் அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கொப்புள நோய் தாக்குதல்
நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. சுமார் 60 ஆயிரம் சிறு விவசாயிகள் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மிதமான மழையும், அதிகாலை நேரத்தில் நீர்ப்பனி பொழிவு மற்றும் பனிமூட்டமான காலநிலை நிலவுகிறது.
மேலும் காலை நேரத்தில் சூரிய வெளிச்சமில்லாத நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்த மாறுப்பட்ட சீதோஷ்ண நிலையின் காரணமாக தேயிலை செடிகளின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு செடிகளில் கொப்புள நோய் தாக்கி வருகிறது. இந்த நோயால் தேயிலை செடியின் இளம் தண்டுகள் மற்றும் கொழுந்துகள் பாதிக்கப்பட்டு மகசூல் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கட்டுப்படுத்தலாம்
இதுகுறித்து தேயிலை வாரிய அதிகாரிகள் கூறியதவாது:-
மாறுபட்ட சீதோஷ்ண நிலை காரணமாக தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்குதல் அதிகரித்து உள்ளது. இதனை கட்டுப்படுத்த தேயிலை தோட்டங்களில் அதிக நிழல் தரும் மரங்கள் மற்றும் அதன் கிளைகளை அகற்றி, தேயிலை செடிகள் மீது சூரிய வெளிச்சம் படுமாறு செய்ய வேண்டும்.
மேலும் செடிகளில் கொப்புள நோய் பாதிப்பது தெரியவந்தால், பாதிக்கப்பட்ட இலைகள் மற்றும் கொழுந்துகளை கவாத்து மூலம் அகற்றிவிட்டு, எக்ஸோ கன்சோல் 200 மில்லி மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 210 கிராம் ஆகியவற்றின் கலவையை 7 நாட்கள் இடைவெளி விட்டு தெளிப்பான் மூலம் தேயிலை செடிகளுக்கு தெளிக்க வேண்டும்.
இதேபோல பிராப்பிகானாசோல் 125 மில்லி மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 210 கிராம் கலவையை தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். இதன் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story