தீர்ப்புக்கு பயந்து தப்பியோடிய தொழிலாளி தற்கொலை முயற்சி
தீர்ப்புக்கு பயந்து தப்பியோடிய தொழிலாளி தற்கொலை முயற்சி
குன்னூர்
மனைவியை கொன்ற வழக்கில் தீர்ப்புக்கு பயந்து ஊட்டி கோர்ட்டில் இருந்து தப்பியோடிய தொழிலாளி குன்னூரில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி குத்தி கொலை
குன்னூர் அருகே உள்ள எடப்பள்ளி அணியாடா கிராமத்தை சேர்ந்தவர் பென்னி (வயது 58), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி அந்தோணியம்மாள் (50). இவர்களுக்கு 2 மகள் உள்ளனர். பென்னிக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அவர் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 28.4.2017-ம் ஆண்டு அந்தோணியம்மாளை பென்னி கத்தியால் குத்தி கொலை செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கொலக்கெம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து பென்னியை கைது செய்தனர்.
கோர்ட்டில் இருந்து தப்பியோட்டம்
இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. தற்போது பென்னி ஜாமீனில் உள்ளார். இந்த நிலையில் மனைவி கொலை வழக்கில் விசாரணை முடிந்து நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக பென்னியை கோலக்கெம்பை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மதியம் 2 மணிக்கு தீர்ப்பு கூறப்பட இருந்தது.
இதற்கிடையில் டீ குடித்துவிட்டு வருவதாக கூறி சென்ற பென்னி கோர்ட்டில் இருந்து தப்பியோடிவிட்டார். இதனால் இந்த வழக்கு தீர்ப்பு நேற்று வழங்கப்படுவதாக இருந்தது.
தற்கொலை முயற்சி
இந்த நிலையில் ஊட்டி கோர்ட்டில் இருந்து தப்பிய பென்னி குன்னூர் அருகே சின்ன வண்டிசோலையில் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிசிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூற இருந்த நிலையில் தொழிலாளி தற்கொலைக்கு முயன்றதால், இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பு கூறப்படலாம் என்று அரசு தரப்பு வழக்கில் தெரிவித்தார்.
தீர்ப்பு வழங்க இருந்த நாளில் கோர்ட்டில் இருந்து தப்பியோடியவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story