வளர்ப்பு யானைகளுக்கு 25 கிலோ அரிசி வழங்கிய மாணவர்கள்


வளர்ப்பு யானைகளுக்கு 25 கிலோ அரிசி வழங்கிய மாணவர்கள்
x
தினத்தந்தி 15 Sept 2021 8:42 PM IST (Updated: 15 Sept 2021 8:42 PM IST)
t-max-icont-min-icon

வளர்ப்பு யானைகளுக்கு 25 கிலோ அரிசி வழங்கிய மாணவர்கள்

கூடலூர்

கூடலூர் அருகே வளர்ப்பு யானைகளுக்கு 25 கிலோ அரிசியை 3 பள்ளி மாணவர்கள் வழங்கினர். அவர்களை நாடுகாணி தாவரவியல் பூங்காவின் தூதுவர்களாக வனத்துறையினர் நியமித்துள்ளனர்.

தாவரவியல் சூழல் பூங்கா

கூடலூர் அருகே நாடுகாணி தாவரவியல் சூழல் பூங்கா உள்ளது. அரிய வகை தாவரங்கள், மீன் காட்சியகம், ஆர்க்கிட்டோரியம், பெரணி இல்லங்கள் என சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளது. இதனால் சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தாவரவியல் பூங்காவை காண வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். 

இதனால் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நாடுகாணி, தேவாலா பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. இதனால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று முதுமலையில் இருந்து பொம்மன், விஜய், சீனிவாஸ், சுஜெய் என 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக காட்டு யானைகளை விரட்டும் பணியில் கும்கி யானைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் காட்டு யானைகள் ஊருக்குள் வருவது தடுக்கப்பட்டது.

யானைகளுக்கு 25 கிலோ அரிசி

இருப்பினும் கும்கி யானைகள் நாடுகாணி தாவரவியல் பூங்கா வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கும்கி யானைகளுக்கு தேவையான பசுந்தீவனங்களை பாகன்கள், வனத்துறையினர் அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தேவாலா பகுதியைச் சேர்ந்த 7, 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களான சந்தீஷ்குமார், நகுலன், சஞ்சய் ஆகியோர் நாடுகாணி தாவரவியல் சூழல் பூங்கா வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 4 கும்கி யானைகளுக்கு 25 கிலோ அரிசியை இலவசமாக நேற்று வழங்கினர்.

இதையறிந்த கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம், நாடுகாணி வனச்சரகர் பிரசாத் உள்ளிட்ட வனத்துறையினர் கும்கி யானை களுக்கு 25 கிலோ அரிசி வழங்கிய மாணவர்களை பாராட்டினர்.

தூதுவர்களாக நியமிக்கப்பட்டனர்

தொடர்ந்து இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து கோவை மண்டல கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மஞ்சுநாதா 3 மாணவர்களையும் தாவரவியல் சூழல் பூங்காவின் தூதுவர்களாக நியமிக்கும்படி உத்தரவிட்டார். 

இதை ஏற்று மாணவர்கள் சூழல் பூங்காவின் தூதுவர்களாக நியமிக்கப்பட்டனர். பின்னர் தாவரவியல் சூழல் பூங்காவை மாணவர்களுக்கு வனத்துறையினர் சுற்றிக் காண்பித்தனர்.

இதுகுறித்து வனச்சரகர் பிரசாத் கூறியதாவது:-

சிறு வயதில் யானைகளுக்கு 25 கிலோ அரிசியை வழங்கிய மாணவர்களுக்கு இயற்கையாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் யானைகள் மீதான அன்பு ஆகியவை உள்ளது. 

இதனால் விடுமுறை நாட்களில் 3 மாணவர்களுக்கும் துறை சார்பில் இயற்கை சார்ந்த கல்வி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story