திண்டிவனம் அருகே பட்டப்பகலில் துணிகரம் கத்திமுனையில் ஊறுகாய் கம்பெனி ஊழியர்களிடம் ரூ.30 லட்சம் பறிப்பு முகமூடி அணிந்து வந்த 8 பேர் கும்பல் கைவரிசை


திண்டிவனம் அருகே பட்டப்பகலில் துணிகரம் கத்திமுனையில் ஊறுகாய் கம்பெனி ஊழியர்களிடம் ரூ.30 லட்சம் பறிப்பு முகமூடி அணிந்து வந்த 8 பேர் கும்பல் கைவரிசை
x
தினத்தந்தி 15 Sep 2021 4:30 PM GMT (Updated: 15 Sep 2021 4:30 PM GMT)

திண்டிவனம் அருகே ஊறுகாய் கம்பெனி ஊழியர்கள் சென்ற காரை நடுரோட்டில் வழிமறித்து கண்ணாடியை உடைத்து கத்திமுனையில் ரூ.30 லட்சத்தை பறித்துச் சென்ற முகமூடி அணிந்த 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பிரம்மதேசம், 
பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஊறுகாய் கம்பெனி 

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஊறுகாய் தயாரிப்பு கம்பெனி இயங்கி வருகிறது. இந்த கம்பெனிக்கு சொந்தமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், மேல்மலையனூர் பகுதிகளில் விவசாய பண்ணை உள்ளது. 
திண்டிவனம், மேல்மலையனூர் பகுதிக்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகளிடம் ஊறுகாய் தயாரிப்பதற்காக வெள்ளரி கொள்முதல் செய்வதோடு, அதற்கான பணத்தை விவசாய பண்ணையில் வைத்து ஊழியா்கள் வினியோகம் செய்வது வழக்கம்.

முகமூடி அணிந்து வந்த 8 பேர் 

அந்த வகையில் திண்டிவனம் அடுத்த சாத்தமங்கலத்தில் உள்ள விவசாய பண்ணையில் வைத்து விவசாயிகளுக்கு பணம் வழங்குவதற்காக ஊறுகாய் கம்பெனி மேலாளர் ராஜா(வயது 31), காசாளர் சிபி சக்கரவர்த்தி(28) ஆகியோர் ரூ.30 லட்சத்தை ஒரு பையில் எடுத்துக்கொண்டு காரில் புறப்பட்டனர். காரை டிரைவர் கிருஷ்ணன்(24) என்பவர் ஓட்டினார். 
அந்த கார், நேற்று காலை 8.30 மணியளவில் திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது முகத்தை துணியால் மூடியபடி 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் திடீரென காரை வழிமறித்தது.
பின்னர் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய வேகத்தில் காரின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்தனர்.

ஊழியர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி...

இதில் காரில் இருந்தவர்கள் செய்வதறியாது திகைத்த நிலையில், சற்றும் எதிர்பாராதவிதமாக காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த காசாளர் சிபி சக்கரவர்த்தியின் கழுத்தில் முகமூடி அணிந்த நபர் ஒருவர், கத்தியை வைத்து மிரட்டினார். அந்த சமயத்தில் மற்ற 7 பேரும் காரை சுற்றிவளைத்தனர்.
தொடர்ந்து அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் காரில் இருந்த ரூ.30 லட்சத்தை பறித்துக் கொண்டு, அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். 
இதையடுத்து பணத்தை பறிகொடுத்த ஊறுகாய் கம்பெனி ஊழியர்கள், இதுபற்றி பிரம்மதேசம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

போலீஸ் சூப்பிரண்டு நேரில் விசாரணை

அதன்பேரில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபு, சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஊறுகாய் கம்பெனி ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். 
இதனிடையே தப்பிச்சென்ற 8 பேர் கொண்ட கும்பலை பிடிக்க சோதனை சாவடிகளை உஷார்படுத்தி அவர்களை தேடும் பணியில் போலீசார் மும்முரமாக இறங்கினர்.
இந்த வழிப்பறி சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா நிருபர்களிடம் கூறுகையில், ஊறுகாய் கம்பெனி ஊழியர்கள் காரில் பணம் எடுத்து செல்வதை நோட்டமிட்ட 8 பேர் கொண்ட கும்பல், தலைவாசல் பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை வழியாக பின்தொடர்ந்து வந்து, திண்டிவனம் அருகே வைத்து காரை வழிமறித்து, ரூ.30 லட்சத்தை பறித்துச் சென்றுள்ளனர். அவர்களை பிடிக்க திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டதோடு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

பரபரப்பு

மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிந்து, மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
பட்டப்பகலில் நடுரோட்டில் சினிமாவை போல அரங்கேறிய இந்த வழிப்பறி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story