ஜி.எஸ்.டி. வரி உயர்வை திரும்ப பெற வேண்டும்


ஜி.எஸ்.டி. வரி உயர்வை திரும்ப பெற வேண்டும்
x
தினத்தந்தி 15 Sept 2021 10:23 PM IST (Updated: 15 Sept 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

தேங்காய் எண்ணெய் மீதான ஜி.எஸ்.டி. வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று தென்னை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பொள்ளாச்சி,

தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர்கள்-நிறுவனங்கள் கூட்டமைப்பு சார்பில் தலைவர் சக்திவேல் தலைமையில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் மூலம் வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. பேக்கிங் செய்யப்பட்ட சமையல் தேங்காய் எண்ணெய்க்கு ஜி.எஸ்.டி. வரி விகிதம் 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது. இதனால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பயிரிடப்பட உள்ள பகுதி மேலும் குறையும்.

ஏற்கனவே நிலத்தடி நீர் பற்றாக்குறை, பயிர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு செலவுகள், வேலை ஆட்கள் குறைபாடு போன்ற பல்வேறு பிரச்சினைகளால் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த முன்மொழியப்பட்ட ஜி.எஸ்.டி. வரி விகித உயர்வால் விவசாயிகள் தவிர நுகர்வோர் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்துக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். 

ஜி.எஸ்.டி. வரி அதிகரிப்பு ஏற்கனவே சமையல் எண்ணெய் விலை அதிகரிப்பு பிரச்சினை மற்றும் மலிவான எண்ணெய்களுடன் கலப்படத்திற்கு வழிவகுக்கும். தேங்காய் எண்ணெய் மற்றும் பிற தேங்காய் சார்ந்த சிறுதொழில்கள், கிராமப்புற வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்கின்றன.

இந்த வரி உயர்வு அவர்களின் வாழ்வாதாரத்தையும், கிராமப்புற பொருளாதாரத்தையும் பெரிதும் பாதிக்கும். தேங்காய் எண்ணெய்யின் ஜி.எஸ்.டி. வரி விகிதத்தின் அதிகரிப்பு தேங்காய் எண்ணெய்யின் போட்டி தன்மையை பாதிக்கும். மேலும் நுகர்வோர் மற்ற எண்ணெய்க்கு மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. 

இதனால் தென்னை விவசாயிகளின் எதிர்காலத்திற்கு ஆபத்து ஏற்படும். எனவே விவசாயிகள், நுகர்வோர் மற்றும் கிராமப்புற பொருளாதாரங்களை காப்பாற்ற ஜி.எஸ்.டி. வரி அதிகரிப்பை திரும்ப பெற தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story