நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஜனாதிபதி விரைவில் ஒப்புதல் -தொல்.திருமாவளவன் எம்.பி. கோரிக்கை


நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஜனாதிபதி விரைவில் ஒப்புதல் -தொல்.திருமாவளவன் எம்.பி. கோரிக்கை
x
தினத்தந்தி 16 Sept 2021 12:00 AM IST (Updated: 16 Sept 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஜனாதிபதி விரைவில் ஒப்புதல் தர வேண்டும் என்று தொல்.திருமாவளவன் எம்.பி. கோரிக்கை விடுத்து உள்ளார்.

காரைக்குடி,

நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஜனாதிபதி விரைவில் ஒப்புதல் தர வேண்டும் என்று தொல்.திருமாவளவன் எம்.பி. கோரிக்கை விடுத்து உள்ளார்.

பேட்டி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. காரைக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அண்ணா பிறந்த நாளை விடுதலை சிறுத்தைகள் மாநில சுயாட்சி நாளாக அதற்கான உறுதிமொழி ஏற்கும் நாளாகவும் கடைப்பிடிப்போம். மாநில சுயாட்சியை வென்றெடுப்பது அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதாகும். மத்தியில் கூட்டாட்சி தத்துவம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அங்கே அதிகமான அதிகாரங்கள் குவிக்கப்படக் கூடாது என்ற குரல் அண்ணா காலத்திலிருந்து தான் ஒலிக்கத் தொடங்கியது.
 இன்று பல்வேறு மாநிலங்களிலும் எழ தொடங்கியுள்ளது. பெரியாரும், அண்ணாவும் சனாதன சக்திகளின் எதிர்ப்பு அடையாளமாக சமூக நீதிக்கான அடையாளங்களாக விளங்குகின்றனர். அண்ணா பிறந்தநாளையொட்டி 700 ஆயுள் தண்டனை கைதிகளை தமிழக முதல்-அமைச்சர் விடுவித்துள்ளார். இது அவர்கள் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியையும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்.

தேர்தல்
9 மாவட்ட ஊராட்சி தேர்தலை தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து தேர்தலை சந்திக்க உள்ளோம். நீட் தேர்வால் மன அழுத்தத்திற்கு ஆளாகி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது பெரும் துயரை தருகிறது. இதற்கு மத்திய மோடி அரசே பொறுப்பேற்க வேண்டும். தமிழக அரசு நிறைவேற்றியுள்ள நீட் விலக்கு மசோதாவிற்கு ஜனாதிபதி உடனடியாக ஒப்புதல் தர வேண்டும். இல்லையென்றால் ஒட்டுமொத்த தமிழகமும் ஒருங்கிணைந்து நீட் தேர்வுக்கு எதிராக அறப் போராட்டத்தில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்படும். தமிழக அரசு சமூகநீதிக்கான அரசாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
 இவ்வாறு அவர் கூறினார்.
மனித சங்கிலி போராட்டம்
பின்னர் மாலையில் நடைபெற்ற பீமா கோரேகான் சதி வழக்கில் சிறைப்படுத்தப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். உபா என்னும் அடக்குமுறைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்குடி பெரியார் சிலை அருகே மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தொல்.திருமாவளவன் எம்.பி.தலைமை தாங்கினார்.
 தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் சாமுவேல் ராஜ் சிறப்பு உரையாற்றினார். இதில் ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணைச்செயலாளர் பி.எல்.ராமச்சந்திரன், தி.மு.க. நகர செயலாளர் குணசேகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கண்ணகி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்டச் செயலாளர் சங்கு உதயகுமார், தெற்கு மாவட்ட செயலாளர் திருமொழி, ம.தி.மு.க. நகர செயலாளர் சேது தியாகராஜன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



Next Story