குளத்தில் பரிசல் கவிழ்ந்து தத்தளித்த குழந்தைகள்


குளத்தில் பரிசல் கவிழ்ந்து தத்தளித்த குழந்தைகள்
x
தினத்தந்தி 16 Sept 2021 12:02 AM IST (Updated: 16 Sept 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே குளத்தில் பரிசல் கவிழ்ந்ததில் தண்ணீரில் குழந்தைகள் தத்தளித்தனர். இதில் மீட்கப்பட்ட மாணவி பரிதாபமாக இறந்து போனாள்.

கன்னிவாடி:

பள்ளி மாணவி

தேனி மாவட்டம் பெரியகுளம் நடகோட்டையை ேசர்ந்தவர் மணிமுத்து. விவசாயி. இவருடைய மனைவி மகாலட்சுமி. இவர்களது குழந்தைகள் முத்து ஹர்ஷினி (வயது 12), முத்து கனிஷ்கர் (5). இவர்களில் முத்து ஹர்ஷினி பெரியகுளத்தில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மகாலட்சுமி திருப்பூர் செல்வதற்காக தனது குழந்தைகளுடன் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே தர்மத்துப்பட்டியில் உள்ள தனது தந்தை குமரேசன் வீட்டிற்கு வந்தார். நேற்று காலை முத்து ஹர்ஷினி தனது பெரியப்பா ரத்தினசாமியுடன் தர்மத்துப்பட்டியில் உள்ள குளத்திற்கு மீன்வாங்க சென்றார். 

அவர்களுடன் முத்து கனிஷ்கர், பெரியப்பா மகள் தர்ஷினி ஆகியோரும் சென்றனர்.

பரிசலில் பயணம்

பின்னர் அவர்கள் மீனை வாங்கி ஒருவர் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து குளத்தின் கரைப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பரிசலில் செல்ல குழந்தைகள் ஆசைப்பட்டனர். இதையடுத்து ரத்தினசாமி குழந்தைகளை பரிசலில் அழைத்து கொண்டு குளத்திற்குள் சென்றார்.

 பரிசல் சிறிது தூரம் சென்றதும் எதிர்பாராதவிதமாக தலைக்குப்புற கவிழ்ந்தது. 4 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர். ரத்தினசாமி சுதாரித்துக் கொண்டு 3 குழந்தைகளையும் காப்பாற்ற முயன்றார்.

 இதில் தர்ஷினி, முத்து கனிஷ்கர் ஆகியோரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். அதன்பின்னர் முத்து ஹர்ஷினியை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவள் குளத்தில் இருந்த சேற்றில் சிக்கி கொண்டாள். 

இருப்பினும் சேற்றில் மூழ்கிய முத்து ஹர்ஷினியை மீட்டு ரத்தினசாமி கரைக்கு கொண்டு வந்தார். ஆனால் நீ்ண்ட நேரம் முத்து ஹர்ஷினி சேற்றில் சிக்கி இருந்ததால் மயக்கமடைந்தாள். 

இதையடுத்து முத்து ஹர்ஷினி சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். 

பிறந்த நாளில் சோகம்

ஆனால் அங்கு அவள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனாள். இதுகுறித்து கன்னிவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் போலீசார் மாணவி முத்து ஹர்ஷினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இறந்த மாணவி முத்து ஹர்ஷினிக்கு நேற்று பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. பிறந்த நாளில் பள்ளி மாணவி குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story