கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுத்தார்
ஆவணி மூலத்திருவிழாவில் கருவூர் சித்தருக்கு, சுவாமி நெல்லையப்பர் காட்சியளிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நெல்லை:
ஆவணி மூலத்திருவிழாவில் கருவூர் சித்தருக்கு, சுவாமி நெல்லையப்பர் காட்சியளிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
ஆவணி மூலத்திருவிழா
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஆனி மாதம் நடைபெறும் தேர்த்திருவிழா, ஆடி மாதம் நடைபெறும் வளைகாப்பு வைபவம் மற்றும் ஆவணி மாதம் நடைபெறும் ஆவணி மூலத்திருவிழா ஆகியவை சிறப்பு வாய்ந்ததாகும்.
ஆவணி மூலத்திருவிழா என்பது, கருவூர் சித்தர் அனைத்து சிவன் கோவில்களுக்கு சென்று வழிபட்டு வரும்போது சிவனை அழைத்தால் சிவன் அவருக்கு காட்சி கொடுப்பது வழக்கம். இதேபோல் நெல்லையப்பர் கோவிலுக்கு வந்த கருவூர் சித்தர் சுவாமியை அழைத்தார்.
சாப விமோசனம்
அப்போது கோவில் நடைசாத்தப்பட்டதால் கருவூர் சித்தருக்கு, சுவாமி நெல்ைலயப்பர் காட்சி கொடுக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட அவர், இங்கு ஈசன் இல்லை. இதனால் இங்கு எருக்கும், குருக்கும் முளைக்க கடவது என்று சாபம் கொடுத்து விட்டு மானூர் சென்று விட்டார். இதனால் பதற்றம் அடைந்த பாண்டிய மன்னர் ஈசனை மானூர் அழைத்துச்சென்று அங்கிருந்து கருவூர் சித்தரை நெல்லையப்பர் கோவிலுக்கு அழைத்து வந்து காட்சி கொடுக்க வைத்தார். இதன் பிறகு சாபவிமோசனம் கிடைத்தது.
இவ்வாறு கருவூர் சித்தருக்கு காட்சி கொடுக்கும் விழா ஆவணி மூலத்திருவிழாவாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆவணி மூலத்திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், உள் வீதி உலாவும் நடந்தது.
இந்த ஆண்டு கொேரானா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக நேற்று சுவாமி நெல்லையப்பர் மானூருக்கு செல்லவில்லை.
கரூவூர் சித்தருக்கு காட்சி
அதற்கு பதிலாக நெல்லையப்பர் கோவில் மேலகோபுர வாசல் அருகே சுவாமி, கருவூர் சித்தருக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நேற்று நடைபெற்றது. அப்போது இந்த திருவிளையாடலை ஓதுவர் மூர்த்திகள் பாடினார்கள். இதைத்தொடர்ந்து சுவாமிக்கும், கருவூர் சித்தருக்கும் அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி, அம்பாள் மற்றும் கருவூர் சித்தருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
இந்த விழாவில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கோவில் ஊழியர்களும், அர்ச்சகர்களும், தேவாரம், திருவாசகம் பாடுபவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story