வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை
அம்பை அருகே வாலிபரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அம்பை:
அம்பை அருகே வாலிபரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கூலித்தொழிலாளி
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள பிரம்மதேசத்தைச் சேர்ந்தவர் இசக்கி. இவருடைய மகன் தங்கப்பாண்டி (வயது 25), கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவில் அப்பகுதி வழியாக சென்றபோது, அங்கு வந்த மர்ம கும்பல் திடீரென்று தங்கப்பாண்டியை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் பலத்த காயமடைந்த தங்கப்பாண்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.
போலீசார் விசாரணை
இதனை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்து, அம்பை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இறந்த தங்கப்பாண்டியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
தங்கப்பாண்டியை கொலை செய்தது யார்?, எதற்காக கொலை செய்தனர்?, முன்விரோதம் காரணமாக கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
அம்பை அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story