போலீஸ்காரரின் தம்பி சரமாரி வெட்டிக்கொலை


போலீஸ்காரரின் தம்பி சரமாரி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 16 Sept 2021 1:17 AM IST (Updated: 16 Sept 2021 1:17 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் பழிக்குப்பழியாக போலீஸ்காரரின் தம்பி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

நெல்லை:
நெல்லையில் பழிக்குப்பழியாக போலீஸ்காரரின் தம்பி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

வெட்டிக் கொலை

நெல்லை பாளையங்கோட்டை சாந்திநகர் போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் மக்தூம். இவருடைய மகன் அப்துல் காதர் (வயது 27). இவர் தற்போது பாளையங்கோட்டை சங்கர் நகர் காலனியில் வசித்து வந்தார். 
இந்த நிலையில் நேற்று இரவு அப்துல் காதர் பாளையங்கோட்டை கேண்டின் அருகே உள்ள ஒரு இடத்தில் தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, அங்கு 5-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் 10 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்தனர். அவர்கள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் அப்துல் காதரை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து பரிதாபமாக இறந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம கும்பல் அங்கு இருந்து தப்பிச் சென்றுவிட்டது.

போலீசார் விரைந்தனர்

இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் டி.பி.சுரேஷ்குமார், உதவி போலீஸ் கமிஷனர்கள் பாலசந்தர், விஜயகுமார், பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் அருணாசலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

அப்துல் காதர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

பழிக்குப்பழியாக...

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடந்த ஒருவரின் கொலைக்கு பழிக்குப்பழியாக அப்துல்காதர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

எனினும் கொலைக்கு இதுதான் காரணமாக அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்ம கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அப்துல் காதரின் உறவினர்கள் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் குவிந்துள்ளனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மர்ம கும்பலை வலைவீசி தேடிவருகிறார்கள். கொலை செய்யப்பட்ட அப்துல் காதரின் அண்ணன் போலீஸ்காரராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story