விவசாயிகள் நூதன போராட்டம்
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு நிலம் கொடுத்த உழவர்கள் உரிமை மீட்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராவணன், ஒருங்கிணைபாளர் தங்க.சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமையில் அந்த இயக்கத்தினர் அண்ணா பிறந்த நாளான நேற்று 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து வாழை இலையில் செம்மண் கட்டி, சாத்துக்குடி, சின்ன வெங்காயம் ஆகியவற்றை வைத்து அதனை சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை அல்லது நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும். கிடப்பில் போடப்பட்ட பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திட்டத்தை தொடங்க வேண்டும். குன்னம் அருகே வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும். துங்கபுரத்தில் மக்காச்சோளம், பருத்தி, சின்ன வெங்காயத்திற்கு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும். கரம்பியத்தில் கல்மரம் உள்ள பகுதியை புராதன பகுதியாக அறிவிக்க வேண்டும். வேப்பூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும். வேப்பூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஏரிகளில் நடைபாதையுடன் சிறுவர் பூங்காக்கள் அமைக்க வேண்டும். லெப்பைக்குடிகாடு பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். குன்னத்தில் தமிழ் தாத்தா உ.வே.சா.-க்கும், முருக்கன்குடியில் வே.ஆணைமுத்துவுக்கும் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். பின்னர், கோரிக்கைகள் அடங்கிய மனுவினை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story