மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 3 வாலிபர்கள் பரிதாப சாவு
செங்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நண்பர்கள்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை கொட்டாம்புளி தெருவைச் சேர்ந்தவர் மாரி. இவருடைய மகன் சுரேஷ்குமார் (வயது 24). அதே பகுதியில் அண்ணாவி தெருவில் வசித்தவர் கண்ணன் மகன் சதாசிவம் (24).
நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று மாலையில் ஒரு மோட்டார் சைக்கிளில் புளியரையில் இருந்து செங்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்
மேலகடையநல்லூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து மகன் நாகலிங்கம் (24). இவர் அப்பகுதியைச் சேர்ந்த தன்னுடைய நண்பரான கார்த்திக்குடன் மோட்டார் சைக்கிளில் புளியரைக்கு சென்று கொண்டிருந்தார்.
இவர்களது மோட்டார் சைக்கிள் செங்கோட்டை அருகே கட்டளைகுடியிருப்பு அருகில் கொல்லம் மெயின் ரோட்டில் சென்று கொண்டு இருந்தது. அப்போது, எதிரே சுரேஷ்குமார், சதாசிவம் ஆகியோரின் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டு இருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
3 பேர் பலி
இந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த நாகலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடியவாறு கிடந்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனாலும் அங்கு சிகிச்சை பலனின்றி சதாசிவம், சுரேஷ்குமார் ஆகிய 2 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை
படுகாயமடைந்த கார்த்திக் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இறந்த நாகலிங்கத்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி உதவி கலெக்டர் ராமச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். செங்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story