ஜி.எஸ்.டி. வரி செலுத்தாமல் லாரிகளில் கொண்டு சென்ற ரூ.7 கோடி வேர்க்கடலை பறிமுதல்
ஜி.எஸ்.டி. வரி செலுத்தாமல் 7 லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.7 கோடி மதிப்பிலான வேர்க்கடலை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பெலகாவி:
5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி
கர்நாடகத்தில் மலைநாடு மாவட்டங்களில் பாக்கு, அரக்கு, வேர்க்கடலை உள்ளிட்டவை விளைச்சல் செய்யப்படுகின்றன. மலைநாடு மாவட்டங்களில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ஏற்றி செல்லப்படும் பாக்கு, வேர்க்கடலைக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும். ஆனால் அரசுக்கு ஜி.எஸ்.டி. வரி செலுத்தாமல் பாக்கு, அரக்கு, வேர்க்கடலை ஆகியவை வெளிமாநிலங்களுக்கு லாரிகளில் ஏற்றி செல்லப்படுவதாக சரக்கு மற்றும் சேவை வரி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இந்த நிலையில் சிவமொக்காவில் இருந்து டெல்லி, அகமதாபாத்துக்கு பெலகாவி வழியாக 7 லாரிகளில் ஜி.எஸ்.டி. வரி செலுத்தாமல் வேர்க்கடலை எடுத்து செல்லப்படுவது மங்களூரு சரக்கு மற்றும் சேவை வரி அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதுகுறித்து பெலகாவியில் உள்ள அதிகாரிகளுக்கு, மங்களூரு அதிகாரிகள் தகவல் தெரிவித்து இருந்தனர்.
ரூ.7 கோடி வேர்க்கடலை பறிமுதல்
இதையடுத்து பெலகாவி அருகே உப்பள்ளி-நவலகுந்து ரோட்டில் சரக்கு மற்றும் சேவை வரி அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த 7 லாரிகளையும் தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது லாரிகளில் மூட்டை, மூட்டையாக வேர்க்கடலை இருந்தது.
ஆனால் அவற்றை ஜி.எஸ்.டி. வரி செலுத்தாமல் எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து 7 லாரிகளில் இருந்த ரூ.7 கோடி மதிப்பிலான வேர்க்கடலைகளையும், அதை ஏற்றி சென்ற 7 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 7 லாரிகளின் டிரைவர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story