திருவண்ணாமலையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு காரை கடத்தி வந்த வாலிபர்


திருவண்ணாமலையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு காரை கடத்தி வந்த வாலிபர்
x
தினத்தந்தி 16 Sept 2021 3:33 AM IST (Updated: 16 Sept 2021 3:33 AM IST)
t-max-icont-min-icon

டிரைவரை தாக்கி திருவண்ணாமலையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு காரை கடத்தி வந்த வாலிபரை, மோட்டார் சைக்கிளில் துரத்திச்சென்று போலீஸ் டிரைவர் பிடித்தார்.

பட்டுக்கோட்டை; 
டிரைவரை தாக்கி திருவண்ணாமலையில் இருந்து   பட்டுக்கோட்டைக்கு காரை கடத்தி வந்த வாலிபரை, மோட்டார் சைக்கிளில் துரத்திச்சென்று போலீஸ் டிரைவர் பிடித்தார். 
கார் கடத்தல்
மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்தவர் வேலுபாண்டி(வயது 23). இவர் தனது நண்பர் வெங்கடேஷ் என்பவருடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பஸ் நிலையத்திற்கு சென்று உள்ளார். அங்கு இருந்த ஒரு வாடகை காரை மதுரைக்கு செல்ல வேண்டும் என கூறி வாடகைக்கு எடுத்துள்ளார். 
அந்த கார் செய்யாறை தாண்டி சிறிது தூரம் சென்ற பிறகு காரில் இருந்த வேலுபாண்டி, வெங்கடேஷ் ஆகிய இருவரும் கத்தியை காட்டி டிரைவரை மிரட்டியுள்ளனர். பின்னர் டிரைவரிடம் இருந்த பணம் மற்றும் வெள்ளி கைச்சங்கிலியை பறித்துக்கொண்டு அவரை தாக்கி காரில் இருந்து கீழே தள்ளி விட்டு காரை கடத்திக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். 
போலீஸ் டிரைவர்
இதுகுறித்து கார் டிரைவர், திருவண்ணாமலை மாவட்ட போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் திருவண்ணாமலை போலீசார் கார் கடத்தப்பட்ட தகவலை தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தெரிவித்தனர்.
திருவண்ணாமலை போலீசார் மைக்கில் கூறிய கார் எண்ணை தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணனிடம் டிரைவராக பணியாற்றும் முதல் நிலை காவலரான பிரசாத்(30) குறித்து வைத்துக்கொண்டார். 
மடக்கி பிடித்தார்
இந்த நிலையில் நேற்று மதியம் 12.45 மணிக்கு பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் உள்ள மருந்துக்கடையில் மருந்து வாங்க போலீஸ் டிரைவர் பிரசாத் வந்தார். அப்போது அந்த வழியாக மைக்கில் கூறப்பட்ட எண்ணுடன் ஒரு கார் சென்றது. 
இதைக்கண்ட பிரசாத் தனது மோட்டார் சைக்கிளில் அந்த காரை விரட்டி சென்று பட்டுக்கோட்டை டி.இ.எல்.சி. பள்ளி அருகே வைத்து காரை மடக்கி பிடித்தார். போலீசை கண்டதும் வேலுப்பாண்டி, வெங்கடேஷ் இருவரும் காரை அங்கேயே விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். 
இதனால் அவர்களை பிரசாத் துரத்தி பிடிக்க முயன்றார். அப்போது தவறி கீேழு விழுந்த பிரசாத் காயம் அடைந்தார். இருப்பினும் அவர் விடாமல் துரத்திச்சென்று வேலுப்பாண்டியை மட்டும் மடக்கி பிடித்தார். வெங்கடேஷ் தப்பி ஓடிவிட்டார். 
கைது-கார் மீட்பு
பின்னர் வேலுப்பாண்டியை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார். பிடிபட்ட வேலுப்பாண்டியிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து 2 செல்போன்கள், ரூ.8 ஆயிரம், வெள்ளி கைச்சங்கிலி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. 
மேலும் திருவண்ணாமலையில் இருந்து கடத்தி வரப்பட்ட காரும் மீட்டகப்பட்டது. வேலுப்பாண்டியை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய வெங்கடேசை போலீசார் தேடி வருகிறார்கள். 
பாராட்டு
கீேழ விழுந்ததில் காயம் அடைந்த ஏட்டு பிரசாத் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் காரை கடத்தி வந்த வாலிபரை மடக்கி பிடித்த போலீஸ் டிரைவர் பிரசாத்தை தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன் மற்றும் போலீசார் பாராட்டினர்.

Next Story