விலைவாசி உயர்வு தொடர்பான விவாதம்; கர்நாடக சட்டசபையில் கூச்சல்-குழப்பம்


விலைவாசி உயர்வு தொடர்பான விவாதம்; கர்நாடக சட்டசபையில் கூச்சல்-குழப்பம்
x
தினத்தந்தி 16 Sept 2021 3:47 AM IST (Updated: 16 Sept 2021 3:47 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல்-டீசல் விலையை நாள்தோறும் உயர்த்தி மத்திய அரசு கொள்ளையடிக்கிறது என்று சட்டசபையில் சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். விலைவாசி உயர்வு தொடர்பாக நடந்த விவாதத்தின்போது அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

பெங்களூரு:

விலை உயர்ந்துவிட்டது

  கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 13-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் கூட்டத்தில் சி.எம்.உதாசி எம்.எல்.ஏ. உள்பட முக்கிய பிரமுகர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சபை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இக்கூட்டத்தொடரின் 3-வது நாள் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து விதி எண் 60-ன் கீழ் விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசும்போது கூறியதாவது:-

  நாட்டில் விலைவாசி விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்பட அத்தியாவசிய பொருட்கள், சிமெண்டு, இரும்பு கம்பிகள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. கடந்த 6 மாதமாக சட்டசபை நடக்கவில்லை. சட்டசபை நடந்தால் தானே இதுபோன்ற பிரச்சினைகள் குறித்து பேசி அரசின் கவனத்தை ஈர்க்க முடியும். ஆனால் மாநில அரசு கொரோனா என்ற பெயரில் சட்டசபை கூட்டத்தை குறித்த நேரத்தில் நடத்தவில்லை.

  விலைவாசி உயர்வால் சாமானிய மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விலைவாசி உயர்வை கண்டிக்கும் வகையில் நாங்கள் கடந்த 13-ந் தேதி சட்டசபை கூட்டத்திற்கு மாட்டு வணடிகளில் வந்தோம். இதை குறை சொல்கிறார்கள். 1983-ம் ஆண்டு பெட்ரோல் விலை லிட்டர் 7 பைசா உயர்ந்ததை கண்டித்து வாஜ்பாய் மாட்டு வண்டியில் நாடாளுமன்றத்திற்கு வந்தார். அவர் பேசும்போது, இது ஒரு குற்ற கொள்ளை என்று வர்ணித்தார்.

தப்பிக்க முடியாது

  நான் அவர் கூறிய வார்த்தைகளைவிட பெரிய கருத்தை கூற விரும்பவில்லை. அவர் கூறிய அதே வார்த்தை அதாவது இது குற்ற கொள்ளை என்று நானும் சொல்கிறேன். பெட்ரோலிய பொருட்களின் விலையை நாள்தோறும் உயர்த்தி அதன் மூலம் மத்திய அரசு கொள்ளையடிக்கிறது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய் நிறுவனங்கள் தான் காரணம் என்று மத்திய அரசு சொல்கிறது. ஆனால் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு யாருக்கு உள்ளது. இந்த பொறுப்பில் இருந்து மத்திய அரசு தப்பிக்க முடியாது.

  சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துவிட்டது. பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்திவிட்டது. டீசல் மீது கலால் வரி கடந்த 7 ஆண்டுகளில் 9 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மன்மோகன்சிங் ஆட்சியை விட்டு சென்றபோது, டீசல் மீதான கலால் வரி ரூ.3.45 ஆக இருந்தது. அது தற்போது ரூ.31.84 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் பெட்ரோல் மீது இருந்த ரூ.9.21 கலால் வரி தற்போது, ரூ.32.98 ஆக உயர்ந்துள்ளது.

மக்கள் மீதான சுமை

  விலைவாசி உயர்வுக்கு இந்த பெட்ரோலிய பொருட்களின் விலை அதிகரித்தது தான் காரணம். பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100-ஐ தாண்டிவிட்டது. டீசல் விலை ரூ.96 ஆக உள்ளது. ஏழைகள், விவசாயிகள், நடுத்தர மக்கள் இருசக்கர வாகனங்களை தான் அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் எப்படி வாழ்க்கையை நடத்த முடியும்?. உலக சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதிலும், இங்கு பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்கவில்லை. அதற்கு பதிலாக மத்திய அரசு கலால் வரியை உயர்த்தி கொண்டது.

  முன்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி இருந்தபோது மக்கள் மீதான சுமையை குறைக்கும் நோக்கத்தில் ஆயில் நிறுவனங்களுக்கு பாண்டுகள் வழங்கப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.1.34 லட்சம் கோடி ஆகும். அதற்கு ஆண்டுக்கு வட்டியாக ரூ.9,989 கோடி செலுத்தப்படுகிறது. கடந்த 7 ஆண்டுகளில் ரூ.70 ஆயிரம் கோடி வட்டி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் கலால் வரி உயர்வு மூலம் மத்திய அரசுக்கு ரூ.24 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது.
  இவ்வாறு சித்தராமையா பேசினார்.

கூச்சல்-குழப்பம் நிலவியது

  அப்போது சட்டசபை விவகாரத்துறை மந்திரி மாதுசாமி குறுக்கிட்டு, "இது நாடாளுமன்றம் அல்ல, சட்டமன்றம். பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு குறித்து நீங்கள் அங்கு தான் பேச வேண்டும். இதற்கு நாங்கள் எப்படி பதிலளிக்க முடியும். அதனால் நீங்கள் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு குறித்து பேசுவது சரியல்ல. அதற்கும், மாநில அரசுக்கும் தொடர்பு இல்லை" என்றார்.

  அதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் எழுந்து நின்று, பேச ஆரம்பித்தார். அதற்கும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து குரலை உயர்த்தி பேசினர். பதிலுக்கு பா.ஜனதா உறுப்பினர்கள் சிலரும் எழுந்து நின்று சுதாகருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இதனால் சபையில் சிறிதுநேரம் கூச்சல்-குழப்பம் நிலவியது. அதன் பிறகு சபை உணவு இடைவேளைக்காக ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் சபை தொடங்கியபோது பேசிய சித்தராமையா, "விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
  
2 இட்லி-ஒரு வடை 38 ரூபாய்

சித்தராமையா பேசும்போது, "விலைவாசி உயர்வால் உணவகங்களில் உணவு வகைகளின் விலையும் அதிகரித்துவிட்டது. உணவகங்களில் 2 இட்லி-ஒரு வடையின் விலை ரூ.20 ஆக இருந்தது. 

அது தற்போது ரூ.38 ஆக அதிகரித்துள்ளது. இதனால் உணவகங்களில் சாப்பிடுபவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.

60 நாட்கள் கூட்டத்தை நடத்த வேண்டும்

சட்டசபையில் சித்தராமையா பேசும்போது, ‘‘6 மாத இடைவெளிக்குள் சட்டசபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மாநில அரசு தற்போது சட்டசபை கூட்டத்தை கூட்டியுள்ளது. 

சட்டசபை கூட்டம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 60 நாட்கள் கூட்ட வேண்டும் என்று சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை 20 நாட்கள் மட்டுமே இந்த கூட்டம் நடந்துள்ளது. தற்போது 10 நாட்கள் கூட்டம் நடைபெற்றால் அது 30 நாட்களாக அதிகரிக்கும்’’ என்றார்.


Next Story