கே.கே.நகரில் வீடு மீது வெடிகுண்டு வீச்சு - முன்விரோதத்தில் ரவுடிகள் வெறியாட்டம்
சென்னை கே.கே.நகரில் வெடிகுண்டு வீசி ரவுடிகள் வெறியாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
சென்னை கே.கே.நகர் வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் சுமன். இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு அனைவரும் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சுமன் வீட்டில் நாட்டு வெடிகுண்டை வீசினார்கள். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. நல்ல வேளையாக குண்டு வீட்டு மீது படாமல் அருகில் விழுந்து வெடித்ததால், வீட்டில் தூங்கிய சுமன் உள்பட குடும்பத்தவர்கள் உயிர் பிழைத்தார்கள்.
அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து வெளியில் பார்த்தனர். இதற்குள் வெடி குண்டு வீசிய மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன் மேற்பார்வையில், கே.கே.நகர் இன்ஸ்பெக்டர் பத்மாதேவி போலீஸ் படையுடன் சென்று விசாரணை நடத்தினார்.
போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. வெடிகுண்டு வீச்சில் உயிர் தப்பிய சுமனின் அண்ணன் பெயர் புறா மணி. இவர் பிரபல ரவுடி. கடந்த 2018-ம் ஆண்டு மதுரவாயல் வானகரம் மீன் மார்க்கெட்டில் வைத்து புறா மணி படுகொலை செய்யப்பட்டார். தனது அண்ணன் புறா மணியை கொன்றவர்களை, பழிக்குப்பழி வாங்காமல் விட மாட்டேன் என்று சுமன் சபதம் போட்டு செயல்பட்டதாக கூறப்படுகிறது. எனவே புறாமணியை போட்டு தள்ளிய ரவுடி கும்பலைச் சேர்ந்தவர்கள்தான் சுமனையும், அவரது குடும்பத்தினரையும் தீர்த்துக்கட்ட நாட்டு வெடிகுண்டை வீசி இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு வீசிய ரவுடிகளை போலீசார் கண்காணிப்பு கேமரா உதவியுடன் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story