திருவள்ளூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் - கலெக்டர் வெளியிட்டார்
திருவள்ளூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும், சென்னை தலைமை தேர்தல் அதிகாரி அரசு முதன்மை செயலாளர் அறிவுரையின்படியும், நகர்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் 1500 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு செய்து வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 3 ஆயிரத்து 622 முதன்மை வாக்குச்சாவடிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுரையின்படி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் தணிக்கை செய்து தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு மாறுதல் முன்மொழிவுகள் அனுப்பி வைத்ததன் பேரில் அவை மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி மறுசீரமைக்கப்பட்ட 3 ஆயிரத்து 656 முதன்மை வரைவு வாக்குச்சாவடி பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
இதன் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்களின் அலுவலகங்களான வருவாய் கோட்ட அலுவலகம், மண்டல அலுவலகம் மற்றும் உதவி வாக்குப்பதிவு அலுவலர்களின் அலுவலகங்களான தாசில்தார், நகராட்சி ஆணையர் அலுவலகங்களில் உள்ள விளம்பர பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், குடியிருப்போர் நல சங்க உறுப்பினர்கள் எவருக்கேனும் ஆட்சேபனை அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனில் தங்களது எழுத்துபூர்வமான கடிதங்களை வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோருக்கு இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிட்ட 7 நாட்களுக்குள் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் முரளி, வித்யா, தேர்தல் தாசில்தார் கண்ணன், அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story