தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்
சுடுகாட்டை மீட்டுத் தரக்கோரி நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜோலார்பேட்டை,
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியில் கொத்தூர் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வருவாய்த் துறைக்கு சொந்தமான இடத்தை சுடுகாடாக பயன்படுத்தி வந்தனர். இந் நிலையில் சுடுகாடு இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்து பட்டா பெற்று விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
அவர்கள், இறக்கும் நபர்களை அடக்கம் செய்ய விடுவதில்லை என கூறப்படுகிறது. இதனால் ஊர் பொது மக்கள் சுடுகாடு இடத்தை மீட்டுத்தர வேண்டும், பட்டா வழங்கியதை ரத்து செய்து இறந்தவர்களின் உடலை புதைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வந்தனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் பூங்கொடி தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனால் தாசில்தார் சம்பவம் இடத்தினை பார்வையிட்ட சென்றார். இதனால் சுமார் 3 மணி நேரம் பொது மக்கள் தாலுகா அலுவலகத்தில் தர்ணாவில் அமர்ந்திருந்தனர்.
அதன் பின்னர் அவர்களிடம் தாசில்தார் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது பட்டாவை ரத்து செய்து இறந்தவர்களின் உடல்கள் புதைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் தாசில்தார் வாகனத்தை முற்றுகையிட்டனர்.
இதனால் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார், சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதைத்தொடர்ந்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சுமார் 3 மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது.
Related Tags :
Next Story