டிக்டாக் பிரபல பெண்ணின் குடும்பம் குறித்து யூடியூப் சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பிய பெண் கைது தேனி சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை
அவதூறு பரப்பிய பெண் கைது
தேனி:
தஞ்சாவூர் மாவட்டம் மருங்குளம் பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் மகள் திவ்யா (வயது 27). இவர் ‘டிக்டாக்' செயலி இந்தியாவில் பயன்பாட்டில் இருந்த போது அதில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு பிரபலம் ஆனார். 'டிக்டாக்' செயலி தடை செய்யப்பட்ட பின்பு அவர், தனியாக ‘யூடியூப்' சேனல் தொடங்கி அதில் பல்வேறு வீடியோக்கள் பதிவிட்டு வந்தார். அதில் சர்ச்சைக்குரிய வீடியோக்களையும் அவர் பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில், ‘டிக்டாக்' மூலம் தேனி அருகே நாகலாபுரத்தை சேர்ந்த 35 வயது பெண் ஒருவரும் பிரபலம் அடைந்தார். ‘டிக்டாக்' தடை செய்யப்பட்ட பின்னர் அந்த பெண் பிற சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் அந்த பெண் குறித்தும், அவருடைய குடும்ப உறுப்பினர்கள் குறித்தும் அவதூறான கருத்துகளை ‘யூடியூப்' மூலம் திவ்யா பரப்பினார்.
நாகூரில் கைது
இதுகுறித்து தேனி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில், சம்பந்தப்பட்ட பெண் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திவ்யாவை தேடி வந்தனர். இந்நிலையில் திவ்யா நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்கா அருகில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பதிவிட்டார். அதைப் பார்த்ததும் தேனியில் இருந்து தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் நாகூர் விரைந்து சென்று திவ்யாவை கைது செய்தனர். பின்னர் நடந்த விசாரணையை தொடர்ந்து அவர் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நிலக்கோட்டை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story