244 பயனாளிகளுக்கு ரூ.7½ கோடியில் நலத்திட்ட உதவிகள்-அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்
திருவண்ணாமலையில் நடந்த நிகழ்ச்சியில் 244 பயனாளிகளுக்கு ரூ.7½ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் நடந்த நிகழ்ச்சியில் 244 பயனாளிகளுக்கு ரூ.7½ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உங்கள் தொகுதியில் முதல்- அமைச்சர் துறையின் சார்பில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமரசாமி வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பல்வேறு துறை சார்பில் 244 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 62 லட்சத்து 69 ஆயிரத்து 300 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
பண்ணை குட்டைகள்
தமிழக முதல்- அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உதவியுடன் கொரோனா தொற்றினை விரட்டும் வகையில் 1000-க்கும் மேற்பட்ட தடுப்பூசி முகாம்களை நடத்தி திருவண்ணாமலை மாவட்டத்தில் 52 சதவீதம் தடுப்பூசிகளை செலுத்தி இருக்கிறோம்.
எனவே ஊழியர், செவிலியர், மருத்துவர்களுக்கு எனது நன்றியினையும், மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் ஒரு மாதத்தில் 1,121 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்து பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டு உலக சாதனைகள் பட்டியலில் திருவண்ணாமலை மாவட்டம் இடம் பெற்றிருக்கிறது.
அதற்காக மாவட்ட கலெக்டர், கூடுதல் கலெக்டரையும் பாராட்டுகிறேன்.
தூய்மை பாரத இயக்க ரதம்
மேலும் முதல்- அமைச்சர் திருத்தணி, திருச்செந்தூர் முருகன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் காலை முதல் மாலை வரை வரும் பக்தர்களுக்கு இலவச அன்னதான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17-ந்தேதி சமூக நீதி நாளாக கொண்டாட ஆண்டு தோறும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத்துறை அலுவலகங்களிலும் சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையால் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத நிலையை உருவாக்கிட பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு தூய்மை பாரத இயக்க ரதம் மற்றும் ஊர்வலத்தை அமைச்சர் எ.வ.வேலு கொடியசைத்து தொடங்கி வைத்து துண்டு பிரசுரத்தை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அம்பேத்குமார் (வந்தவாசி), ஜோதி (செய்யாறு), மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், கூடுதல் கலெக்டருமான மு.பிரதாப், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன், அரசுத் துறை உயர் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story