திருப்பூரில் ஏழுமலையான் கோவில் பூட்டை உடைத்து 3 ஐம்பொன் சிலைகள், ஆபரண நகை மற்றும் உண்டியல் பணம் கொள்ளை


திருப்பூரில் ஏழுமலையான் கோவில் பூட்டை உடைத்து 3 ஐம்பொன் சிலைகள், ஆபரண நகை மற்றும் உண்டியல் பணம்  கொள்ளை
x
தினத்தந்தி 16 Sept 2021 9:38 PM IST (Updated: 16 Sept 2021 9:38 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் ஏழுமலையான் கோவில் பூட்டை உடைத்து 3 ஐம்பொன் சிலைகள், ஆபரண நகை மற்றும் உண்டியல் பணம் கொள்ளை

திருப்பூர், 
திருப்பூரில் ஏழுமலையான் கோவில் பூட்டை உடைத்து 3 ஐம்பொன் சிலைகள், ஆபரண நகை மற்றும் உண்டியல் பணத்தை கொள்ளையர் ஒருவர் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஏழுமலையான் கோவில்
திருப்பூர் வீரபாண்டி  ஜே.ஜே.நகர் 2-வது வீதியில் ஏழுமலையான் கோவில் உள்ளது.இந்த கோவிலில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.கோவிலை ஜே.ஜே. நகர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பொதுமக்கள் கடந்த 5 தலைமுறையாக  பராமரித்து வருகிறார்கள்.கோவில் பூசாரியாக அந்த பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் இருந்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் ஒரு கால பூஜை நடைபெறுகிறது.தினமும் காலையில்கோவிலுக்கு வரும் பூசாரி, பூஜை நடந்ததும் கோவிலை பூட்டி விட்டு சென்று விடுவார். இந்த கோவில் கருவறைக்குள் ஒரு பெட்டியில்7 சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. இதில் ½அடி உயரம் கொண்ட சிவலிங்கேஸ்வரர், காசி விசுவநாதர், ஏழுமலையான் ஆகிய 3 ஐம்பொன் சிலைகளும், மற்ற 4 சிலைகளும் கல் சிலைகளாகும்.  
 இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு வழக்கம்போல் கோவிலில் பூஜை செய்ய  பூசாரி வந்துள்ளார். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து கோவிலுக்குள் சென்று பார்த்தார்.  அப்போது கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. 
3 ஐம்பொன் சிலைகள் கொள்ளை
இதனால் பதற்றத்துடன் கோவில் கருவறைக்கு சென்று அங்கு ஐம்பொன் சிலைகள் உள்ள பெட்டியை பார்த்தார். அந்த பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதையடுத்து அந்த பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கேஸ்வரர், காசி விசுவநாதர் மற்றும்  ஏழுமலையான் ஆகிய 3 ஐம்பொன் சிலைகளை மட்டும் காணவில்லை. மேலும் சிலைக்கு அணிவிக்கும் தங்க ஆபரணங்கள் வைக்கப்பட்டிருந்த நகை பெட்டியும் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த 4 பவுன் நகையையும் காணவில்லை. மர்ம ஆசாமி சிலைகள் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. 
 இதுகுறித்து கோவில் கமிட்டி சார்பாக வீரபாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.புகாரின் அடிப்படையில் துணை கமிஷனர் வரதராஜன் உத்தரவின் பேரில் வீரபாண்டி இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ்குமார், அழகுராஜா மற்றும் போலீசார் சதீஷ், ரங்கராஜன் ஆகியோர் சம்பந்தப்பட்டகோவிலுக்கு வந்து பார்வையிட்டு விசாரணை செய்தனர். 
மேலும் கோவில் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் கொள்ளையில் ஈடுபட்ட ஆசாமியின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். அப்போது சம்பவத்தன்று அதிகாலை 3 மணிக்கு கோவிலுக்கும் வரும் ஆசாமி ஒருவர் கோவில் பூட்டை உடைத்து கோவிலுக்குள் செல்வதும், பின்னர் ஐம்பொன்சிலை, நகைகள், உண்டியல் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து செல்வதும் பதிவாகி உள்ளது. இதையடுத்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த ஆசாமியின் உருவ அமைப்பை வைத்து  அவரை தேடி வந்தனர். 
தொழிலாளி கைது
இந்த நிலையில் செட்டிபாளையம் மும்மூர்த்தி பகுதியில்  ஒருவரது வீட்டில் ஐம்பொன் சிலைகள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் இருந்தவர் 3 ஐம்பொன் சிலைகள், கோவில் ஆபரண நகை மற்றும் பணம் ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
 விசாரணையில் அவருடைய பெயர் மணி (வயது 39) என்றும், பனியன் நிறுவன தொழிலாளியான இவர், ஏழுமலையான் கோவில் பூட்டை உடைத்து அங்கிருந்த 3 ஐம்பொன் சிலைகள், நகை மற்றும் உண்டியல் பணத்தை கொள்ளையடித்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து மணியை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து  3 ஐம்பொன் சிலைகள், சிலைக்கு அணிவிக்கும் ஆபரணங்கள்  4 பவுன் மற்றும் உண்டியலில் இருந்த பணம் ரூ. 2 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.  சிலை கொள்ளை வழக்கில் துரிதமாக செயல்பட்டு சிலைகள் மற்றும் பணத்தை மீட்ட வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் உடன் இருந்த போலீசாரை கமிஷனர் பாராட்டினார்.

Next Story