தர்மபுரியில் பரபரப்பு: பேராலயத்தில் 6 உண்டியல்கள் திருட்டு-மேற்கூரையை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை


தர்மபுரியில் பரபரப்பு: பேராலயத்தில் 6 உண்டியல்கள் திருட்டு-மேற்கூரையை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 16 Sept 2021 9:57 PM IST (Updated: 16 Sept 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் மேற்கூரையை உடைத்து 6 உண்டியல்கள் திருடப்பட்டன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தர்மபுரி:
தேவாலயத்தில் திருட்டு
தர்மபுரி நகரில் பென்னாகரம் மெயின் ரோட்டில் தூய இருதய ஆண்டவர் பேராலயம் உள்ளது. கொரோனா பரவல் தடை உத்தரவு காரணமாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்களில் தேவாலயம் பூட்டப்படுகிறது. மற்ற நாட்களில் தேவாலயத்திற்கு கிறிஸ்தவர்கள் வந்து பிரார்த்தனை செய்து விட்டு செல்கின்றனர். 
இந்த நிலையில் தேவாலயத்தை நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றனர். பின்னர் நேற்று காலை வந்து பார்த்தபோது தேவாலயத்தின் மேற்கூரை உடைக்கப்பட்டுள்ளதையும், அந்த வளாகத்தில் இருந்த 6 உண்டியல்கள் காணாமல் போனதையும் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அங்கு ஒரு உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது.
இது குறித்து பங்குதந்தை ஆனந்தபாபு தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் விரைந்து வந்து தேவாலய வளாகத்தில் விசாரணை நடத்தினர். அப்போது காணாமல் போன உண்டியல்கள் அருகில் உள்ள அவ்வையார் அரசு பள்ளி மைதானத்தில் கிடந்தது தெரியவந்தது.
ரூ.1 லட்சம் திருட்டு
இதைத்தொடர்ந்து அந்த மைதானத்தில் இருந்த 6 உண்டில்களை போலீசார் மீட்டனர். போலீசார் விசாரணையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் தேவாலயத்தின் மேற்கூரையை உடைத்து உள்ளே இறங்கி அங்கிருந்த உண்டியல்களை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. மேலும் தேவாலயத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் நேற்று அதிகாலை 5 மணி வரை செயல்படாமல் இருந்தது தெரிந்தது. இதனால் தேவாலய ஊழியர்களே உண்டியலை திருடி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 
மொத்தம் ரூ.1 லட்சம் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவாலயத்தில் திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story