வீடுகளை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம்
வால்பாறையில் வீடுகளை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.
வால்பாறை,
வால்பாறை அருகே முத்துமுடி எஸ்டேட் பகுதியில் உள்ள வனச்சோலையில் கடந்த 2 நாட்களாக 2 குட்டிகளுடன் காாட்டுயானை முகாமிட்டு இருந்தது. மேலும் தொழிலாளர்களின் குடியிருப்புக்குள் புகுந்து வீட்டை இடித்து அட்டகாசம் செய்து வந்தது.
இந்த நிலையில் அந்த யானைகள் நேற்று முன்தினம் அங்கிருந்து நல்லமுடி எஸ்டேட் 2-வது பிரிவு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நள்ளிரவில் புகுந்தன. தொடர்ந்து 4 வடமாநில தொழிலாளர்களின் வீடுகளை உடைத்து அட்டகாசம் செய்தன. மேலும் ரேஷன் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை தின்றதோடு வீட்டு உபயோக பொருட்களை சேதப்படுத்தின. இதை அறிந்த தொழிலாளர்கள் திரண்டு வந்து காட்டுயானைகளை விரட்டியடித்தனர்.
இதையடுத்து அங்கு மானாம்பள்ளி வனத்துறையினர் வந்து பார்வையிட்டனர். அப்போது அவை நல்லமுடி பூஞ்சோலை வனப்பகுதிக்குள் முகாமிட்டு இருந்தன. தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் நல்லமுடி எஸ்டேட் பகுதிக்கு வந்த மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன், பாதிக்கப்பட்ட வடமாநில தொழிலாளர்களுக்கு ஆறுதல் கூறி எஸ்டேட் நிர்வாகம் மூலம் தேவையான உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுத்தார். மேலும் 3 சிறப்பு குழுக்களை அமைத்து வனவர்கள் தலைமையில் வாகன வசதிகளுடன் நேற்று காலை முதல் நல்லமுடி, ஆனைமுடி, தாய்முடி ஆகிய எஸ்டேட் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார். மேலும் எஸ்டேட் பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story