திருவெண்ணெய்நல்லூர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்
பள்ளி மாணவர் பலி
அரசூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அரசூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் ஆபிரகாம் (வயது 17). திருவெண்ணெய்நல்லூரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். ஆபிரகாம் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் அதே பகுதியில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டார்.
அரசூர் மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது, சென்னையில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற காரும், ஆபிரகாம் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஆபிரகாம் மற்றும் காரை ஓட்டி வந்த கோவையை சேர்ந்த வெள்ளைச்சாமி(24) ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு ஆபிரகாம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். வெள்ளைச்சாமிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story