வாடகைக்கு அழைத்து சென்று டிரைவரை தாக்கி கார் கடத்தல்
செய்யாறு அருகே வாடக்கைக்கு அழைத்து சென்று டிரைவரை தாக்கி காரை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
செய்யாறு
செய்யாறு அருகே வாடகைக்கு அழைத்து சென்று டிரைவரை தாக்கி காரை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாடகைக்கு அழைத்து சென்றனர்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு- ஆற்காடு சாலையில் உள்ள ஆதிபராசக்தி கோவிலில் இருந்து சென்னைக்கு செல்லவேண்டும் என போன் மூலம் தொடர்புகொண்டு சென்னையில் இயங்கி வரும் வாடகைக் காரை கடந்த 14-ந்தேதி வாடகைக்கு எடுத்துக்கொண்டு 4 பேர்கொண்ட கும்பல் இரவு 10.30 மணியளவில் செய்யாறிலிருந்து வெம்பாக்கம் சாலை வழியாக சென்றனர்.
திருப்பனங்காடு அருகே சென்றபோது காரில் சென்ற ஒருவர் தனக்கு வாந்தி வருவதுபோல இருப்பதாக கூறி காரை நிறுத்தச்சொல்லி நான்கு பேரும் காரைவிட்டு இறங்கியுள்ளனர். அப்போது கார் டிரைவரும் காரைவிட்டு இறங்கி உள்ளார்.
டிரைவரை தாக்கி கார் கடத்தல்
உடனே அந்த கும்பல் கார் டிரைவரை சரமாரியாக தாக்கி மறைத்து வைத்திருந்த கத்தியால் டிரைவரை வெட்டியுள்ளனர். அதில் டிரைவரின் இடதுகையில் பலத்த வெட்டு காயம் ஏற்படவே உயிர் தப்பிக்க வேண்டி அங்கிருந்து ஓடியுள்ளார். உடனே அந்த கும்பல் காரை கடத்திச்சென்று விட்டனர்.
இதுகுறித்து அந்த சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த தூசி இன்ஸ்பெக்டர் அண்ணாமலை காயமடைந்த கார் டிரைவர் சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்த ராம்குமார் என்பவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தார்.
ஒருவர் பிடிபட்டார்
பின்னர் கார் டிரைவர் ராம்குமார் கொடுத்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்தநிலையில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட கார் சுங்கச்சாவடிகளை கடக்கும்போது பாஸ்டேக் மூலம் சுங்கவரி செலுத்தப்பட்டதற்கான குருந்தகவல் கார் உரிமையாளர் பச்சையப்பன் செல்போனுக்கு வந்ததால் போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி உடனடியாக திருச்சி மற்றும் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளை தொடர்பு கொண்டு கார் கடத்தப்பட்ட தகவலை தெரிவித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போது புதுக்கோட்டையில் அந்தவழியாக வந்த காரை மடக்கி அதில் வந்தவர்களை போலீசார் பிடிக்க முயன்றனர்.
அப்போது காரில் வந்த 2 பேரில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். மதுரையை சேர்ந்த வேல்பாண்டியன் என்பவரை பிடித்து பிரம்மதேசம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
3 பேர் கைது
அவரிடம் நடத்திய விசாரணையில் வேல்பாண்டியன் கார் டிரைவர் என்றும் தனது சொந்த கார் விபத்தில் பழுதானதால் அதனை சரிசெய்ய தனது நண்பனான காஞ்சீபுரம் ஐயங்கார்குளம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், செய்யாறு நத்தகொல்லை பகுதியை சேர்ந்த ராஜசேகர் ஆகியோரிடம் பணம் கேட்டதாகவும் அவர்களிடம் பணம் இல்லையென்றதால் தனது காரை சரிசெய்ய ஏதாவது காரை கடத்தி அதிலிருந்து பொருட்களை எடுத்து தனது காரில் மாற்றிக் கொள்ளலாம் என திட்டமிட்டுள்ளார்.
அதன்படி கடந்த 13-ம் தேதி வேல்பாண்டியன், தனது மதுரை நண்பரான வெங்கடேசனை அழைத்துக்கொண்டு செய்யாறு வந்து சதீஷ்குமார் மற்றும் ராஜசேகர் ஆகியோருடன் சென்னையை சேர்ந்த வாடகை காரை வாடக்கைக்கு அழைத்து சென்று டிரைவரை தாக்கிவிட்டு காரை கடத்தி சென்றதுதெரியவந்தது.
வழியில் தூசியில் செய்யாறு பகுதியை சேர்ந்த நண்பர்களை இறக்கிவிட்டுவிட்டு வேல்பாண்டியும், வெங்கடேசனும் திருச்சி வழியாக மதுரைக்கு சென்றுள்ளனர்.
வேல்பாண்டியன் தெரிவித்த தகவலின்படி சதீஷ்குமார், ராஜசேகர் ஆகிய இருவரையும் மற்றும் வேல்பாண்டியனையும் கைது செய்தனர். இவர்கள் வேறு ஏதும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என்று பிரம்மதேசம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story