வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 17 Sept 2021 12:43 AM IST (Updated: 17 Sept 2021 12:43 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே, வெடிகுண்டு வீசிய வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

கடலூர், 

கடலூர் அருகே கீழ்குமாரமங்கலம் செல்லஞ்சேரியை சேர்ந்தவர் அழகப்பன் மகன் தேவா (வயது 24). புதுச்சேரி மாநிலம் கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்தவர் தாடி அய்யனார் (28), ரவுடிகளான இவர்கள் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரும் தனித்தனி கோஷ்டியாக செயல்பட்டு வந்ததாக தெரிகிறது.
தேவா கடந்த 30.6.2021 அன்று அதிகாலை கீழ்குமாரமங்கலம் மலட்டாறு பகுதியில் இருந்த தாடி அய்யனார், அவரது கூட்டாளிகளை தனது கூட்டாளிகளுடன் சென்று, கத்தியால் வெட்டி, நாட்டு வெடி குண்டுகளை வீசினர்.

போலீசில் புகார்

அவர்கள் திருப்பி தாக்குதல் நடத்திய போது, தேவா தப்பி ஓடினார். அப்போது தவறி கீழே விழுந்ததில், அவரது கையில் இருந்த நாட்டு குண்டு வெடித்தது. இதில் அவரது கை சிதைத்தது.
இது பற்றி வேல்முருகன் ரெட்டிச்சாவடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேவா என்கிற தேவன், புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் ராஜீவ்காந்திநகர் பாலகிருஷ்ணன் மகன் அருணாசலம் (23), கீழ்குமாரமங்கலம் மாரியம்மன் கோவில் தெரு ஹேமந்த் (20), களையூர் பழனி மகன் ராம்கி (25), மடுகரை சுப்புராயலு மகன் அய்யனார் என்கிற சின்ன அய்யனார் (21), கரிக்கலாம்பாக்கம் குளத்துமேட்டுத்தெரு விநாயகம் என்கிற விநாயகமூர்த்தி (31) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

குண்டர் சட்டத்தில் கைது

கைது செய்யப்பட்ட 6 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதில் குற்றவாளியான அய்யனார் என்கிற சின்னஅய்யனார் மீது புதுச்சேரி மங்கலம் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.
இதையடுத்து இவரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அய்யனாரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார். அதன்படி அவரை ரெட்டிச்சாவடி போலீசார், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, அதற்கான உத்தரவு நகலை கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவரிடம் வழங்கினர்.
இந்த வழக்கில் தொடர்புடைய அருணாசலம், விநாயகம் ஆகிய 2 பேர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story