போலீஸ்காரர் தம்பி கொலையில் 3 பேர் சிக்கினர்


போலீஸ்காரர் தம்பி கொலையில் 3 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 17 Sept 2021 12:46 AM IST (Updated: 17 Sept 2021 12:46 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் நடந்த போலீஸ்காரர் தம்பி கொலையில் 3 பேர் சிக்கி உள்ளனர்.

நெல்லை:
நெல்லையில் நடந்த போலீஸ்காரர் தம்பி கொலையில் 3 பேர் சிக்கி உள்ளனர்.

வாலிபர் கொலை

நெல்லை பாளையங்கோட்டை சாந்தி நகர் போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் மக்தூம். இவருடைய மகன் அப்துல் காதர் (வயது 27). இவர் தற்போது பாளையங்கோட்டை சங்கர் காலனியில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்துல் காதர் பாளையங்கோட்டை மிலிட்டரி கேண்டீன் அருகே உள்ள ஒரு இடத்தில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் அப்துல் காதரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். 

3 பேர் சிக்கினர்

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் கொலையாளிகளை பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் கொலை தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாத்தான்குளத்தை சேர்ந்த பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்த மார்ட்டின் என்பவரின் கொலை வழக்கில், அப்துல் காதருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அந்த கொலைக்கு பழிக்குப்பழியாக அவா் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 

போலீஸ்காரரின் தம்பி

இதற்கிடையே அப்துல் காதர் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவர்களின் சொந்த ஊரான சாத்தான்குளத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலரை வலைவீசி தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட அப்துல் காதரின் அண்ணன் சாகுல் என்பவர் தாழையூத்தில் போலீஸ்காரராக உள்ளார்.

Next Story