ஒரே பள்ளியில் 52 மாணவ-மாணவிகளுக்கு திடீர் காய்ச்சல்
ஆலங்குளம் அருகே ஒரே பள்ளியில் 52 மாணவ-மாணவிகளுக்கு திடீர் காய்ச்சல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே ஒரே பள்ளியில் 52 மாணவ-மாணவிகளுக்கு திடீர் காய்ச்சல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
பள்ளிக்கூடங்கள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததைத் தொடர்ந்து 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்களை திறந்து நேரடி வகுப்புகளை நடத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி கடந்த சில வாரங்களுக்கு முன்பு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடந்து வருகிறது.
திடீர் காய்ச்சல்
இந்த நிலையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாறாந்தையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியான கல்லத்திகுளம், உடையாம்புளி, புதூர், மாறாந்தை, கரும்புலியூத்து உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
தற்போது 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு வகுப்பு தொடங்கியதால் அவர்கள் தினமும் பள்ளிக்கூடத்திற்கு வந்து செல்கிறார்கள்.
நேற்று முன்தினம் பள்ளிக்கூடத்துக்கு வந்த 22 மாணவ-மாணவிகளுக்கு அடுத்தடுத்து திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், இதுகுறித்து சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து, மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். பின்னர் அவர்களை அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
52 பேர் பாதிப்பு
ஆனால் அதன் முடிவு வராத நிலையில் நேற்றும் 30 மாணவ-மாணவிகளுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டு பரபரப்பை உண்டாக்கியுள்ளது. தொடர்ந்து அந்த மாணவ-மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
இ்ந்த பரிசோதனையில் முடிவுகள் வந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து மாணவ-மாணவிகள் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஒரே பள்ளிக்கூடத்தில் 52 மாணவ-மாணவிகளுக்கு திடீர் காய்ச்சல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story