வாலிபர் சரமாரி குத்திக்கொலை
வாசுதேவநல்லூர் அருகே வாலிபர் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய நண்பர்கள் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் அருகே வாலிபர் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய நண்பர்கள் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரும்பு பட்டறை உரிமையாளர்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே டி.ராமநாதபுரம் குருசாமி பாடசாலை தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 55). இவர் அப்பகுதியில் இரும்பு பட்டறை நடத்தி வருகிறார்.
இவருடைய மகன் விஜய் கணேஷ் (22). இவர் தென்காசியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த சில மாதங்களாக கல்லூரிக்கு செல்வதை நிறுத்தி விட்டு, கூலி வேலைக்கு சென்று வந்தார்.
குத்திக்கொலை
நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற விஜய் கணேஷ் பின்னர் திரும்பி வரவில்லை. எனவே, அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர்.
நேற்று அதிகாலையில் டி.ராமநாதபுரத்துக்கு கிழக்கே கூடலூர் ரோடு நாதகிரிமலை அருகில் உள்ள மொட்டைமலை பகுதியில் விஜய் கணேஷ் உடலில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, வாசுதேவநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சீமைராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
3 நண்பர்களிடம் விசாரணை
இறந்த விஜய் கணேஷின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், விஜய் கணேஷ் தன்னுடைய நண்பர்களான பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்களுடன் அடிக்கடி மொட்டைமலை பகுதிக்கு சென்று மது குடித்து வந்தாராம். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதும், இதனை அப்பகுதியினர் கண்டித்ததும் தெரியவந்தது.
எனவே, மது போதையில் ஏற்பட்ட தகராறில் விஜய் கணேஷ் சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது. இதுதொடர்பாக விஜய் கணேஷின் நண்பர்கள் 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த பயங்கர கொலை காரணமாக அங்கு பதற்றம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story