காரை விரட்டி பிடித்த பட்டுக்கோட்டை போலீஸ் டிரைவருக்கு ஐ.ஜி.பாராட்டு
திருவண்ணாமலையில் இருந்து கடத்தி வரப்பட்ட காரை விரட்டி பிடித்த பட்டுக்கோட்டை போலீஸ் டிரைவரை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலசுப்பிரமணியன் பாராட்டினார்.
பட்டுக்கோட்டை:
திருவண்ணாமலையில் இருந்து கடத்தி வரப்பட்ட காரை விரட்டி பிடித்த பட்டுக்கோட்டை போலீஸ் டிரைவரை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலசுப்பிரமணியன் பாராட்டினார்.
கார் கடத்தல்
மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்தவர் வேலுபாண்டி(வயது 23). இவர் தனது நண்பர் வெங்கடேஷ் என்பவருடன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பஸ் நிலையத்திற்கு சென்று உள்ளார். அங்கு இருந்த ஒரு வாடகை காரை மதுரைக்கு செல்ல வேண்டும் என கூறி வாடகைக்கு எடுத்துள்ளார்.
அந்த கார் செய்யாறை தாண்டி சிறிது தூரம் சென்ற பிறகு காரில் இருந்த வேலுபாண்டி, வெங்கடேஷ் ஆகிய இருவரும் கத்தியை காட்டி டிரைவரை மிரட்டி காரை கடத்தி வந்தனர்.
போலீஸ் டிரைவர்
இதுகுறித்து கார் டிரைவர், திருவண்ணாமலை மாவட்ட போலீசில் அளித்த புகாரின் பேரில் மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். திருவண்ணாமலை போலீசார் மைக்கில் கூறிய கார் எண்ணை தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணனிடம் டிரைவராக பணியாற்றும் முதல் நிலை காவலரான பிரசாத்(30) குறித்து வைத்துக்கொண்டார்.
மடக்கி பிடித்தார்
நேற்றுமுன்தினம் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் மைக்கில் கூறப்பட்ட எண்ணுடன் ஒரு கார் சென்றதைக்கண்ட பிரசாத் தனது மோட்டார் சைக்கிளில் அந்த காரை விரட்டி சென்று பட்டுக்கோட்டை டி.இ.எல்.சி. பள்ளி அருகே வைத்து காரை மடக்கி பிடித்தார். காரில் வந்த இருவரும் காரை அங்கேயே விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை பிரசாத் துரத்திச்சென்று வேலுபாண்டியை மட்டும் மடக்கி பிடித்தார். வெங்கடேஷ் தப்பி ஓடிவிட்டார்.
ஐ.ஜி.பாராட்டு
பின்னர் வேலுபாண்டியை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார். அவரிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரிடம் இருந்து 2 செல்போன்கள், ரூ.8 ஆயிரம், வெள்ளி கைச்சங்கிலி ஆகியவை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தி வரப்பட்ட காரும் மீட்கப்பட்டது. வேலுபாண்டியை போலீசார் கைது செய்தனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் காரை கடத்தி வந்த வாலிபரை மடக்கி பிடித்த போலீஸ் டிரைவர் பிரசாத்தை தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன் மற்றும் போலீசார் பாராட்டினர். இந்நிலையில் நேற்று மாலை பட்டுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்த திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலசுப்பிரமணியன், போலீஸ் டிரைவர் பிரசாத்தை நேரில் அழைத்து பாராட்டினார்.
ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும்
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரசாத் பணியில் சிரத்தையுடன் இருந்து திருடப்பட்ட காரை பிடித்துள்ளார். அந்த கார் தற்போது திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களுக்கு தமிழக காவல்துறை ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும் என்றார்.
அப்போது பட்டுக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு செங்கமலக் கண்ணன் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story