போதிய போலீசார் இல்லாமல் கஞ்சாவை ஒழிப்பது எப்படி என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி
போதிய போலீசார் இல்லாமல் கஞ்சாவை ஒழிப்பது எப்படி என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
மதுரை,
போதிய போலீசார் இல்லாமல் கஞ்சாவை ஒழிப்பது எப்படி என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
பல்வேறு ஜாமீன் மனுக்கள்
கஞ்சா கடத்தல், கஞ்சா விற்பனை மற்றும் போதைப்பொருட்கள் தொடர்பான பல்வேறு வழக்குகளில் சிக்கியவர்கள் தங்களுக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு, “தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் எவ்வளவு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது? அவை எங்கு வைக்கப்பட்டு, எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது?” என்பன போன்ற விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது.
இந்தநிலையில் இந்த மனுக்கள் நீதிபதி புகழேந்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா அனைத்தும் அந்தந்த போலீஸ் நிலையத்தில் தனி அறைகள் அமைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தனி அமைப்பு உருவாக்கி, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் உண்மைத்தன்மை அறியும் பணியும் நடக்கிறது. அதில் 70 சதவீதம் முடிந்துவிட்டது. இன்னும் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்” என தெரிவித்தார்.
போதிய போலீசார் இல்லையே?
அப்போது நீதிபதி, “கள்ளச்சாராயத்தை ஒழிக்க போதுமான போலீசார் ஒதுக்கப்பட்டதால்தான், தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஒழிந்தது. கஞ்சா விற்பனையை தடுப்பதற்கு போதுமான அளவில் போலீசார் இல்லை என தெரிகிறது. இவர்கள் எப்படி முழுமையாக கஞ்சாவை ஒழிப்பார்கள்?” என கேள்வி எழுப்பினார்.
மேலும் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் பலர் கஞ்சாவை பயன்படுத்தி அந்த போதையில் கொலை, கொள்ளை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதை அறிய முடிகிறது. எனவே கஞ்சா விற்பனை முழுமையாக தடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்து, இந்த வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தார்.
Related Tags :
Next Story