பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் 15 பவுன் நகை-ரூ.4 லட்சம் திருட்டு
பெரம்பலூரில் பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் 15 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்:
கோவிலுக்கு சென்றனர்
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள ராஜ் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 50). இவரது மனைவி பூங்கொடி (47). இவர் வேப்பந்தட்டை தாலுகா, வி.களத்தூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு குழந்தை கிடையாது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதசுவாமி கோவிலுக்கு பரிகாரம் செய்வதற்காக புறப்பட்டு சென்றனர்.
இந்நிலையில் நேற்று காலை பூங்கொடி வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்ட அக்கம், பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து அவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பூங்கொடி, கணவருடன் கோவிலில் இருந்து உடனடியாக புறப்பட்டு நேற்று மதியம் வீட்டிற்கு வந்தார்.
ரூ.70 ஆயிரம் தப்பியது
இதற்கிடையே தகவலறிந்து வந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். இதில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டின் படுக்கையறையில் இருந்த அலமாரிகளின் கதவுகள் உடைக்கப்பட்டு திறக்கப்பட்டு கிடந்தன. அலமாரியில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சம் திருட்டு போயிருந்தது. மேலும் பூஜை அறையில் இருந்த ரூ.5 ஆயிரமும் திருட்டு போயிருந்தது. ஆனால் அலமாரியில் ஒரு சேலைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.70 ஆயிரம் அப்படியே இருந்தது, தெரியவந்தது.
சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூரில் கடந்த சில நாட்களாகவே தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், மர்மநபர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் நகை-பணம் திருட்டு போன சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேமராவில் பதிவான மர்மநபர் உருவம்
திருட்டு நடந்த பெண் போலீஸ் ஏட்டு வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் நள்ளிரவு 1.45 மணியளவில் கைகளில் கையுறையுடன், முக்கால் பேண்டு அணிந்திருந்த மர்மநபர் ஒருவரின் உருவம் பதிவாகியிருந்தது. அந்த காட்சிகளை வைத்து போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
மேலும் 2 வீடுகளில் திருட்டு
பெண் போலீஸ் ஏட்டு வீட்டின் அருகே உள்ள வெங்கடாஜலபதி நகரை சேர்ந்த மணிவேல் (38) வீட்டிலும், ஆட்கள் இல்லாததால் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.2 ஆயிரம் மற்றும் உண்டியலில் இருந்த ரூ.3 ஆயிரத்தை திருடிச்சென்றனர். இதேபோல் அருகே எம்.எம்.நகர் கிழக்கு 6-வது குறுக்கு தெருவை சேர்ந்த செல்வகுமார் (36) வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த பீரோவை உடைத்து அரை பவுன் நகை, ஒரு ஜோடி வெள்ளிக்கொலுசு மற்றும் ரூ.10 ஆயிரத்தை திருடி சென்றனர். மேற்கண்ட திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மர்மநபர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகத்தின்பேரில், அவர்களை போலீசார் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story