நிச்சயதார்த்த கோஷ்டி சென்ற வேன் கவிழ்ந்து மணமகன் உள்பட 15 பேர் காயம்


நிச்சயதார்த்த கோஷ்டி சென்ற வேன் கவிழ்ந்து மணமகன் உள்பட 15 பேர் காயம்
x
தினத்தந்தி 17 Sept 2021 1:53 AM IST (Updated: 17 Sept 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிமடம் அருகே நிச்சயதார்த்த கோஷ்டியினர் சென்ற வேன் கவிழ்ந்ததில் மணமகன் உள்பட 15 பேர் காயமடைந்தனர்.

தா.பழூர்:

வேன் கவிழ்ந்தது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், தருமபுரி அருகே உள்ள காமலாபுரம் பகுதியில் வசித்து வரும் டினிட்ரோ என்பவருக்கும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் நேற்று திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக தர்மபுரியில் இருந்து மணமகன் வீட்டார் மற்றும் டிரைவர் உள்பட 19 பேர் ஒரு வேனில் வந்தனர்.கோவிலில் நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர், மீண்டும் விருத்தாசலம் வழியாக தர்மபுரி செல்வதற்காக மணமகன் வீட்டார் அனைவரும், அவர்கள் வந்த அதே வேனில் பயணம் செய்தனர். ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தில் சென்றபோது, சாலையின் குறுக்கே ஆடு ஒன்று திடீரென கடந்து சென்றது. இதனால் ஆட்டின் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் வேனை திருப்பியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து சாலையில் உருண்டதாக கூறப்படுகிறது.
15 பேர் காயம்
இந்த விபத்தில் தருமபுரி காமலாபுரம் பகுதியை சேர்ந்த மணமகன் டினிட்ரோ, அவரது உறவினர்கள் சுலோச்சனா, மதுமிதா, ரத்தினவேல், ருக்மணி, கந்தம்மாள், வடிவேலு, துரைசாமி, ராதா, புவியரசி, முருகம்மாள், பெரியக்காள் உள்பட 15 பேர் காயமடைந்தனர். அவர்களை உடனடியாக அப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story