வாலிபர் கொலை வழக்கில் 6 பேரிடம் விசாரணை
வாலிபர் கொலை வழக்கில் 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
பொன்மலைப்பட்டி
திருச்சி கொட்டப்பட்டு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சின்ராசு (வயது 21). இவருக்கும், பொன்மலை பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் பொன்மலைப்பட்டி கடைவீதி பகுதியில் சின்ராசு சென்று கொண்டிருந்தபோது அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் அவரை ஓட, ஓட வெட்டியதுடன் தலையை துண்டித்து படுகொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த கொலை சம்பந்தமாக பொன்மலை பொன்னேரிபுரத்தை சேர்ந்த அலெக்ஸ் மற்றும் மேலகல்கண்டார்கோட்டை பகுதியை சேர்ந்த சரத் என்பவர் மீதும் சந்தேகத்தின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களுடன் சேர்த்து 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சார்பில் பல்வேறு இடங்களில் சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்தது. அந்த சுவரொட்டியில், கொலையானவரின் பெயரை போட்டு, அகால மரணம் அடைந்து விட்டதாகவும், அவரது இறுதி ஊர்வலம் அவரது இல்லத்தில் இருந்து புறப்படும் என்று கூறப்பட்டு இருந்ததுடன் விரைவில் என முடிக்கப்பட்டு இருந்தது.
விரைவில் என்ற வார்த்தை சின்ராசு கொலைக்கு பழிக்குப்பழி வாங்க திட்டமிடப்பட்டு உள்ளதா? என பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளதுடன், காவல்துறை வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்தும் பொன்மலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story