பெண்களிடம் நகை பறித்த ஆசாமி கைது
இரணியல், வெள்ளிச்சந்தை பகுதிகளில் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஆசாமியை தனிப்படை போலீசார் கைது செய்து 8 பவுன் நகையை மீட்டனர்.
திங்கள்சந்தை:
இரணியல், வெள்ளிச்சந்தை பகுதிகளில் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஆசாமியை தனிப்படை போலீசார் கைது செய்து 8 பவுன் நகையை மீட்டனர்.
தனிப்படைகள் அமைப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மர்ம நபர்களை தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகன சோதனை
இந்த நிலையில் குளச்சல் துணை சூப்பிரண்டு தங்கராமன் ஆலோசனையில் இரணியல் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்மூர்த்தி ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் குருந்தன்கோடு பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து கொண்டிருந்தார். போலீசார் அவரை தடுத்தி நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால், சந்ேதகமடைந்த போலீசார் அந்த வாலிபரை போலீஸ்நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-
ஆசாமி கைது
மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் இரணியலை அடுத்த மொட்டவிளை பகுதியைச் சேர்ந்த மகாராஜன் (வயது 27) என்பது தெரிய வந்தது.
மேலும், இரணியல் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட வில்லுக்குறி பகுதியில் ராதிகா என்பவரிடம் 5 பவுன் சங்கிலியையும், வெள்ளிச்சந்தை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட சடையால்புதூர் பகுதியில் ரெத்தின சிகாமணி மனைவி கண்மணி என்பவர் வீட்டின் பின் பக்கம் வைத்து 3 பவுன் சங்கிலி பறித்ததும், திங்கள்சந்தை அருகே ஒரு எலக்ட்ரிக் கடையின் பூட்டை உடைத்து ரூ.53 ஆயிரத்தை கொள்ளையடித்ததும், காரங்காடு பகுதியில் வின்சென்ட் ராஜ் என்பவர் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படையினர் மகாராஜனை கைது செய்து, அவரிடம் இருந்து 8 பவுன் நகையை மீட்டனர். பின்னர், மகாராஜனை இரணியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story